20 ஆண்டு சிறை தண்டனை...... நீதிமன்ற மாடியில் இருந்து குதித்த குற்றவாளிகள்
திருச்சி திருவானைக்காவல் பகுதியைச் சேர்ந்தவர் பசுபதி(22). அவரது நண்பர்கள் அதே பகுதியைச் சேர்ந்த வரதராஜன் (23), திருப்பதி (24). சிறுமி ஒருத்தியை பலாத்காரம் செய்ததாக இந்த மூவர் மீதும் கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து போக்சோ வழக்கில் இம்மூவரும் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கின் விசாரணை திருச்சி மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
பல கட்ட விசாரணைகள் நடத்தப்பட்டு இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதையொட்டி வழக்கில் தொடர்புடைய மூவரும் நீதிமன்றத்தில் ஆஜராகினர். அவர்கள் மீதான குற்றம் உறுதி செய்யப்பட்டதாக அறிவித்த நீதிபதி ஸ்ரீவத்சன், மூவருக்கும் தலா 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.
அபராதத் தொகையை கட்டத் தவறினால் கூடுதலாக 6 மாதம் சிறைத் தண்டனையும் விதித்து உத்தரவிட்ட நீதிபதி, பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு அரசு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார்.
நீதிபதி தனது தீர்ப்பை வாசித்ததும் நீதிமன்ற அறைக்குள்ளேயே குற்றவாளிகள் மூன்று பேரும் கதறி அழுதனர். இதில் பசுபதி, திருப்பதி ஆகிய இருவரும் திடீரென நீதிமன்றத்தின் இரண்டாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றனர். மாடியிலிருந்து குதித்த அவர்கள் இருவரையும் அங்கிருந்த காவல் துறையினர் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். குற்றவாளிகள் மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தால் திருச்சி மாவட்ட மகளிர் நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
No comments