எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது...... ஈரானை எச்சரித்த பாகிஸ்தான்...... - MAKKAL NERAM

Breaking

Wednesday, January 17, 2024

எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது...... ஈரானை எச்சரித்த பாகிஸ்தான்......

 


பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணம் குஹி சாப் நகரில் உள்ள ஜெய்ஷ் உல் அடெல் பயங்கரவாத குழுவை குறிவைத்து ஈரான் புரட்சிப்படை நேற்று ஏவுகணை மற்றும் டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 2 குழந்தைகள் உயிரிழந்தனர். 3 பேர் காயமடைந்தனர். ஜெய்ஷ் அல் அடெல் பயங்கரவாதக் குழுவின் இரண்டு முக்கிய இடங்கள் குறிவைக்கப்பட்டு வெற்றிகரமாக தகர்க்கப்பட்டதாக ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஏற்கனவே காசா முனையில் நடைபெறும் ஹமாஸ் - இஸ்ரேல் போர் காரணமாக மத்திய கிழக்கு பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், ஈரானின் இந்த தாக்குதல் பதற்றத்தை அதிகரிக்கச் செய்துள்ளது.


இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் வான்வெளியில் ஈரான் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தியிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், இதனால் ஈரான் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் எச்சரித்துள்ளது. ஈரான் பொறுப்பாளரை வெளியுறவு அமைச்சகத்திற்கு வரவழைத்தும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஈரானின் தென்கிழக்கு மாகாணமான சிஸ்தான்-பலோசிஸ்தானில் உள்ள ஒரு காவல்நிலையம் மீது கடந்த மாதம் நடத்தப்பட்ட தாக்குதலில் 11 ஈரானிய காவல்துறை அதிகாரிகள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானில் இயங்கும் ஜெய்ஷ் அல்-அடெல் அமைப்பு மீது ஈரான் உள்துறை மந்திரி அஹ்மத் வஹிதி குற்றம் சாட்டினார். ஜெய்ஷ் அல் அடெல் பயங்கரவாதிகள் பஞ்குர் அருகே பாகிஸ்தான் பகுதியிலிருந்து சிஸ்தானுக்குள் நுழைந்ததாகவும் அவர் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment