கணவர் மாரடைப்பால் உயிரிழப்பு...... அதிர்ச்சியடைந்த மனைவி 7வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை......
டெல்லி, உத்தரப் பிரதேச எல்லையில் உள்ளது காஜியாபாத். இங்குள்ள வைஷாலி, ஆல்கான் குடியிருப்பைச் சேர்ந்தவர் அபிஷேக் அலுவாலி (25). இவரது மனைவி அஞ்சலி. இத்தம்பதிக்கு கடந்த ஆண்டு நவம்பர் 30-ம் தேதி தான் திருமணமானது. இந்நிலையில் தம்பதியினர் டெல்லியில் உள்ள ஒரு உயிரியல் பூங்காவுக்கு நேற்று சென்றனர். அப்போது அபிஷேக் அலுவாலிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.
இதையடுத்து அவரது உறவினர்கள் அபிஷேக்கை அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். பின்னர் அவர் கவலைக்கிடமான நிலையில் இருந்ததால் டெல்லியில் உள்ள மற்றொரு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அபிஷேக்கை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மாரடைப்பு ஏற்பட்டதால் அபிஷேக் உயிரிழந்ததாகவும் மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து அபிஷேக்கின் சடலத்தை உறவினர்கள் வீட்டுக்கு கொண்டுவந்தனர். இந்நிலையில் கணவரின் மரணத்தை தாங்கிக்கொள்ள இயலாத அஞ்சலி, திடீரென குடியிருப்பின் 7வது மாடிக்கு ஓடிச் சென்று, திடீரென கீழே குதித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர், உறவினர்கள் உடனடியாக அஞ்சலியை மீட்டு வைஷாலியில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த அஞ்சலி, இன்று அதிகாலை உயிரிழந்தார்.
இளம் வயதில் கணவருக்கு ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக, மனைவியும் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவர்களது உறவினர்கள் மட்டுமின்றி பொதுமக்களிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து இளம் வயது மாரடைப்பு முன்னெச்சரிக்கை குறித்த விழிப்புணர்வு தேவை என சமூகவலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
No comments