கோவில்பட்டி அருகே நிலக்கரி ஏற்றி வந்த சரக்கு லாரி தடுப்புச் சுவரில் மோதி விபத்து....... லாரி தீப்பிடித்து எரிந்து நாசம்.......
தூத்துக்குடியில் இருந்து சிவகாசி பேப்பர் மில்லுக்கு நிலக்கரி லோடு ஏற்றிக்கொண்டு டாரஸ் லாரி ஒன்று புறப்பட்டு சென்றது. லாரியை எப்போதும் வென்றான் அருகேயுள்ள மஞ்ச நாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கற்பகராஜா ( 30) என்பவர் ஓட்டி சென்றார். கோவில்பட்டி அருகே தெற்கு திட்டங்குளம் பகுதியில் லாரி சென்று கொண்டிருந்தபோது திடீரென எதிர்பாராத விதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையின் நடுவே இருந்த தடுப்புச் சுவரில் வேகமாக மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் லாரியின் முன்பக்கம் துண்டாகியது. மேலும் லாரியின் டீசல் டேங்க்கில் தீப்பொறி ஏற்பட்டு மளமளவென தீ லாரியின் பிற பகுதிகளுக்கும் பரவி லாரி முழுவதும் கொழுந்துவிட்டு எரிய தொடங்கியது.பலத்த சத்தம் கேட்டு வீடுகளுக்குள் தூங்கிக் கொண்டிருந்த அப்பகுதி மக்கள் வெளியே வந்து பார்த்தபோது சாலையின் நடுவில் லாரி கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருப்பதை கண்டு போலீசுக்கும் தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனர்.
லாரி டிரைவர் கற்பகராஜா, கிளீனர் ஆழ்வார் திருநகரியை சேர்ந்த முருகேசன் ஆகியோர் லாரியின் கண்ணாடியை உடைத்து கீழே குதித்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.கோவில்பட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் சுந்தர்ராஜன். காவல் உதவி ஆய்வாளர் பார்த்தீபன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து எட்டயபுரம் நெடுஞ்சாலையில் போக்குவரத்தை வேறு பாதைக்கு திருப்பி விட்டனர்.
சுமார் ஒரு மணி நேரமாக போராடி தீயை கட்டுப்படுத்தினர். இருப்பினும் லாரி முற்றிலும் எரிந்து சாம்பலானது.விபத்து காரணமாக கோவில்பட்டி எட்டயபுரம் நெடுஞ்சாலையில் இரண்டு மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.இந்த தீ விபத்து சம்பவம் தொடர்பாக கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments