திமுக நம்மை ஏமாற்றி விட்டது..... பொங்கி எழுந்த மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள்.....
திமுக கூட்டணியில் பெரும் இழுபறியாக இருந்து வந்த தொகுதி பங்கீட்டு பேச்சு வார்த்தைகள் ஒருவழியாக நேற்று முன்தினம் முடிவுக்கு வந்தது. அதில் காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி உட்பட 10 இடங்களும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளுக்கு தலா இரண்டு இடங்களும், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு இடங்களும் வழங்கப்பட்டுள்ளன.
கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் இடம் 2025- ல் வழங்கப்படும் என்றும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், அப்போது மதிமுகவுக்கும் ஒரு மாநிலங்களவை இடம் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள மனிதநேய மக்கள் கட்சி மற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆகியவை தங்களுக்கு இடம் ஒதுக்கப்படாத வருத்தத்தில் உள்ளன.கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்த இரண்டு கட்சிகளும் தங்களுக்கு இந்த தேர்தலில் தலா ஒரு தொகுதியை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தன. ஆனால் அதை திமுக தலைமை நிராகரித்து விட்டது. இந்த நிலையில், மனித நேய மக்கள் கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் பலரும் திமுக கூட்டணியில் தொடர்வது பற்றி மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக மனிதநேய மக்கள் கட்சியின் அவசர உயர்மட்ட நிர்வாகக்குழு கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், தலைமை நிலைய நிர்வாகிகள், மாநில செயலாளர்கள் உள்ளிட்ட 15 பேர் கலந்து கொண்டனர்.
இதில் கலந்து கொண்ட அனைவருமே," திமுக நம்மை ஏமாற்றி விட்டது. கடந்த மக்களவைத் தேர்தலிலும் இடம் இல்லை. இந்த மக்களவைத் தேர்தலிலும் இடம் இல்லை என்றால் நாம் ஏன் திமுகவுக்காக தேர்தல் வேலை செய்ய வேண்டும்? இன்று வந்த கமல்ஹாசனுக்கு கூட மாநிலங்களவை இடம் ஒதுக்கப்படுகிறது. ஆனால், ஆண்டாண்டு காலமாக தேர்தல் களத்தில் திமுகவுக்காக பாடுபட்டுக் கொண்டிருக்கும் நமது கட்சியை திமுக அவமதித்திருக்கிறது. எனவே, திமுகவுக்கு நாம் இந்த தேர்தலில் வேலை செய்ய வேண்டாம்" என்று தெரிவித்துள்ளனர்.திமுக கூட்டணியில் இருக்கும் விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட கட்சிகளுக்கு மட்டும் நாம் தோழமை அடிப்படையில் பணியாற்றலாம் அல்லது கூட்டணியை விட்டு வெளியேறலாம்" என்றெல்லாம் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு இருக்கிறது.
இந்த அளவுக்கு விவகாரம் தீவிரமாகச் செல்வதால் மாவட்ட அளவிலான நிர்வாகிகள் அடங்கிய செயற்குழு கூட்டத்தை அவசரமாக வருகிற மார்ச் 13-ம் தேதி திருச்சியில் கூட்ட மனிதநேய மக்கள் கட்சி முடிவெடுத்துள்ளது. அன்றைய தினம் அந்தக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் இறுதியானது என்பதால் என்ன முடிவு எடுக்கப்படுமோ என்ற எதிர்பார்ப்பு தமிழக அரசியல் களத்தில் நிலவுகிறது.
No comments