அறந்தாங்கி: கடத்தி செல்லப்பட்ட அரசுப் பேருந்து விபத்து...... அதிர்ச்சியில் அதிகாரிகள்.......
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசுப் பேருந்து பணிமனையில் உள்ள அரசுப் பேருந்துகள் அனைத்தும் இரவு நேரங்களில் பணிமனைக்குள் நிறுத்த முடியாததால் அருகே உள்ள பட்டுக்கோட்டை சாலையில் வரிசையாக நிறுத்தப்பட்டிருக்கும். அதிகாலை முதல் ஒவ்வொரு பேருந்தும் அந்தந்த பயண நேரத்திற்கு ஓட்டுநர்கள் ஓட்டிச் செல்வார்கள்.
வழக்கம்போல் நேற்று இரவு பேருந்துகள் சாலை ஓரத்தில் நிறுத்தி வைத்துவிட்டு ஓட்டுநர், நடத்துநர்கள் பணிமனையில் ஓய்வெடுக்கச் சென்று விட்டார். இந்நிலையில் இன்று அதிகாலை திருவாடானை செல்லும் வழியில் ஓரியூர் அருகே வண்டாத்தூர் கிராமத்தில் பிரதானச் சாலையில் ஒரு அரசுப் பேருந்து ஒரு லாரியில் மோதி விபத்துக்குள்ளாகி நின்றது. சத்தம் கேட்டு கிராம மக்கள் ஓடி வந்து பார்த்தபோது லாரி ஓட்டுநர் காலில் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்தார். அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்தில் சிக்கியிருந்த அந்த பேருந்து அறந்தாங்கி பணிமனையைச் சேர்ந்த அறந்தாங்கியில் இருந்து திருவாடானை செல்லும் TN 55 N 0690 என்பது தெரிய வந்தது. ஆனால் யார் இந்த பேருந்தை ஓட்டி வந்தது என்பது தெரியவில்லை. உடனே அறந்தாங்கி டெப்போவிற்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன் பிறகே சாலை ஓரம் வரிசையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்துகளில் திருவாடானை செல்லும் பேருந்து காணாமல் போனது தெரிய வந்தது.பணிமனையில் நிறுத்தி இருந்த பேருந்தை யார் கடத்திச் சென்றது என்று போக்குவரத்து கழக அதிகாரிகளும் ஊழியர்களும் விசாரணையில் உள்ளனர்.
News Source: Nakkheeran
No comments