திருவள்ளூர்: கோயில் மேற்கூறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த செம்மரக்கட்டைகள்..... அதிர்ச்சியில் வனத்துறை அதிகாரிகள்......
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்த ஆலப்பாக்கம் கிராமத்தில் எல்லையம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் ஜாத்திரி திருவிழா கிராம மக்களால் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த கோயிலின் அருகில் உள்ள புறம்போக்கு பகுதியில் செம்மரக்கட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்று சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினரும், போலீஸாரும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள ஏரிக்களம் புறம்போக்கு பகுதியில் சில செம்மரக்கட்டைகள் கிடந்துள்ளது.இதனால் சந்தேகம் அடைந்த போலீஸார் கோயிலின் மேற்கூறையின் மீது ஏறி சோதனை செய்துள்ளனர். அப்போது அங்கு செம்மரக்கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து 50 செம்மரக்கட்டைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். மேலும் கோயிலை சுற்றிலும் கிடந்த 55 செம்மரக்கட்டைகளையும் போலீஸார் மற்றும் வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். இந்த கட்டைகளின் மொத்த எடை ஒரு டன் ஆகும். இந்த செம்மரக்கட்டைகளை கடத்தி வந்து இங்கே பதுக்கி வைத்தவர்கள் யார் என்பது தொடர்பாக தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.பறிமுதல் செய்யப்பட்ட செம்மரங்கள் மூன்றாம் ரகம் கொண்ட மரம் என்பதால், அதன் மதிப்பு மூன்று லட்சம் ரூபாய்க்கும் குறைவாக இருக்கும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். இருப்பினும் ஓராண்டுக்கு முன்பே வெட்டி, வெயிலில் காயவைத்து, பட்டை உரித்து இந்த மரத்தை பதுக்கி வைத்திருப்பதாக வனத்துறையினர் சந்தேகிக்கின்றனர். இதையடுத்து கோயிலுக்கு அடிக்கடி வந்து செல்லும் நபர்கள், கோயிலில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளும் நபர்கள் உள்ளிட்டோரிடம் போலீஸாரும், வனத்துறையினரும் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
குறிப்பாக பழைய குற்றவாளிகள் யாருக்கேனும் இந்த கடத்தல் வழக்கில் தொடர்பு இருக்குமா என்பது தொடர்பாகவும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. கிராம மக்களுக்கு சொந்தமான கோயிலில் செம்மரக்கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
No comments