• Breaking News

    அரவிந்த் கேஜ்ரிவால் கைது..... டெல்லி பாஜக அலுவலகத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு......


    டெல்லி கலால் கொள்கை தொடர்புடைய முறைகேடு வழக்கில் ஆம் ஆத்மி கட்சித் தலைவரும், டெல்லி முதல்வருமான அர்விந்த் கேஜ்ரிவால் அமலாக்கத் துறையால் நேற்று இரவு கைது செய்யப்பட்டார். கலால் கொள்கை முறைகேடு வழக்கில் ஏற்கெனவே 9 முறை சம்மன் அனுப்பியும் கேஜ்ரிவால் விசாரணைக்கு ஆஜராகவில்லை. மேலும் தன்னை கைது செய்யக் கூடாது என நீதிமன்றத்தில் கேஜ்ரிவால் தாக்கல் செய்த கோரிக்கையும் நிராகரிக்கப்பட்ட நிலையில், அமலாக்கத் துறை அவரை கைது செய்தது.

    முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கைது செய்யப்பட்டதற்கு எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், முதல்வர் கேஜ்ரிவால் கைது நடவடிக்கையை கண்டித்து ஆம் ஆத்மி கட்சி நாடு முழுவதும் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.இந்நிலையில் டெல்லி நிதித் துறை அமைச்சர் அதிஷி கூறுகையில், “அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இப்போது அவர் மத்திய அரசின் அமலாக்கத்துறையின் காவலில் உள்ளார். அவரது பாதுகாப்பு குறித்து நாங்கள் கவலை கொண்டுள்ளோம்" என்றார்.

    இந்நிலையில் டெல்லி பாஜக தலைமை அலுவலகத்துக்கு செல்லும் சாலைகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கேஜ்ரிவால் கைதை கண்டித்து ஆம் ஆத்மி கட்சியினர், பாஜக அலுவலகத்தை முற்றுகையிடுவதை தடுக்கும் வகையில் பல அடுக்கு தடுப்புகளை டெல்லி போலீஸார் அமைத்து பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.

    No comments