தெலங்கானா மாநில ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பதவிகளை ராஜினாமா செய்வதாக குடியரசுத் தலைவருக்கு தமிழிசை சௌந்தரராஜன் கடிதம் எழுதியுள்ளார்.
தெலங்கானா மாநிலத்தின் ஆளுநராகவும், புதுச்சேரி மாநிலத்தின் துணைநிலை ஆளுநராகவும் பதவி வகித்து வருபவர் தமிழிசை சௌந்தரராஜன். தமிழக பாஜக தலைவர் உட்பட பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ள தமிழிசை சௌந்தரராஜன், தமிழ்நாட்டில் தேர்தல்களிலும் நேரடியாக களமிறங்கி போட்டியிட்டு உள்ளார். தற்போது நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் அவர் தமிழ்நாட்டில் ஏதேனும் ஒரு தொகுதியில் அல்லது புதுச்சேரியில் களமிறங்குவார் என தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வந்தது.இருப்பினும் இதனை தமிழிசை சௌந்தரராஜனும், பாஜக தலைமையும் ஏற்கவோ மறுக்கவோ இல்லை. இந்நிலையில் தூத்துக்குடி தொகுதியில் திமுக வேட்பாளர் கனிமொழிக்கு எதிராக அவர் களமிறக்கப்படலாம் என்கிற தகவல்கள் சமீப காலமாக தொடர்ந்து வெளியாகி வந்தது. இந்த நிலையில், தான் வகித்து வந்த ஆளுநர் பதவிகளை ராஜினாமா செய்வதாக தமிழிசை சௌந்தரராஜன் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் பாஜக வேட்பாளராக களம் இறங்கிய தமிழிசை சௌந்தரராஜன், திமுக வேட்பாளர் கனிமொழியிடம் தோல்வி அடைந்தார். இதைத் தொடர்ந்து அந்த ஆண்டே அவர் தெலங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். பின்னர் 2021-ம் ஆண்டு புதுச்சேரி மாநிலத்தின் துணைநிலை ஆளுநராக அவருக்கு கூடுதல் பொறுப்பு அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் தமிழிசையின் பதவி விலகல் முடிவு தமிழகம் மற்றும் புதுச்சேரி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment