காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியை சரமாரியாக தாக்கிய வாலிபர் - MAKKAL NERAM

Breaking

Monday, April 8, 2024

காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியை சரமாரியாக தாக்கிய வாலிபர்

 

நாகர்கோவில் கோட்டார் கம்பளம் பகுதியில் பஸ் நிறுத்தம் உள்ளது. நேற்று விடுமுறை தினம் என்பதால் அங்கு மக்கள் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. அங்கு கன்னியாகுமரியை சேர்ந்த 19 வயதுடைய கல்லூரி மாணவி ஒருவர் நாகர்கோவிலில் உள்ள தோழியை பார்த்து விட்டு வீட்டுக்கு செல்வதற்காக பஸ்சுக்காக காத்து கொண்டிருந்தார்.

அந்த சமயத்தில் 25 வயதுடைய வாலிபர் ஒருவர் மோட்டாா் சைக்கிளில் வந்தார். மாணவியின் அருகில் சென்று பேச தொடங்கினார். ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் நிலவியது. இதில் ஆத்திரமடைந்த வாலிபர், மாணவியை கன்னத்தில் ஓங்கி அறைந்தார். மேலும் ஆத்திரம் தீராமல் அவரை கீழே தள்ளி சரமாரியாக தாக்கினார். இதனால் மாணவி வலி தாங்க முடியாமல் காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்... என சத்தமிட்டார்.அந்த சத்தம் கேட்டு சிலர் அங்கு ஓடி வந்தனர். பின்னர் அந்த வாலிபரை தடுக்க முயன்றனர். ஆனாலும் அந்த வாலிபர் மாணவியை தொடர்ந்து தாக்கினார். ஒரு கட்டத்தில் மக்கள் கூட்டம் அதிகமானதால் சுதாரித்து கொண்ட வாலிபர் அந்த இடத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றார்.இதனிடையே தாக்குதல் சம்பவம் குறித்து பொதுமக்கள் மாணவியிடம் கேட்டபோது, தன்னை தாக்கிய நபர் தனது உறவினர் என்பதும், அவர் என்னை காதல் செய்யும்படி தொந்தரவு கொடுத்து வந்தார். ஆனால் காதலை ஏற்க மறுத்தேன். இதனால் அவரை பற்றி எனது பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் புகார் தெரிவித்தேன். இதனை தொடர்ந்து அவர்கள் அந்த வாலிபரை கண்டித்தனர். இதில் ஆத்திரமடைந்த அவர் என்னை தாக்கிவிட்டு சென்றுள்ளார் என அழுதபடி தெரிவித்தார்.இதையடுத்து காயமடைந்த கல்லூரி மாணவி அருகே உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். பின்னர் அவர் அங்கிருந்து உறவினர் ஒருவருக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தார். இதையடுத்து மாணவி, சிகிச்சை முடிந்து உறவினருடன் மோட்டார் சைக்கிளில் சென்றார். இந்த சம்பவத்தால் நாகர்கோவில் கம்பளம் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

No comments:

Post a Comment