தமிழ்நாடு, புதுச்சேரியை உள்ளடக்கிய 40 மக்களவைத் தொகுதிகளில் திமுக கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் வாகை சூடி வருகிறது. திமுக கூட்டணியை எதிர்த்துக் களமிறங்கிய அதிமுக மற்றும் பாஜக கூட்டணிகள் படுதோல்விகரத்தில் உள்ளன. இந்தத் தேர்தலில் முன்னதாக, திமுகவை கடுமையாக எதிர்ப்பதில் ஒருமித்த நிலைப்பாடு கொண்டிருக்கும் பாஜக மற்றும் அதிமுக கட்சிகள் இடையே மக்களவைத் தேர்தலில் கூட்டணி உருவாகும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் பாஜகவை தமிழகத்தில் தனித்து வளர்க்கும் நோக்கில் அதன் மாநிலத்தலைவர் அண்ணாமலை, அதிமுகவுக்கு எதிராகவும் கடுமையாக களமாடினார். இது உட்பட பல்வேறு விவகாரங்களில் அதிமுக மற்றும் மாநில பாஜக இடையே கடுமையாக முட்டிக்கொண்டது. பாஜக தேசியத் தலைமையுடன் அதிமுக இணக்கம் பாராட்டியபோதும், அண்ணாமலை உள்ளிட்ட மாநில பாஜகவினரால் சீற்றம் கொண்டது. இதன் முடிவாக அதிமுக - பாஜக கூட்டணி வாய்ப்பு முறிந்தது.இதனை சரி செய்யும் முயற்சியில் தமிழக பாஜக இறங்காததில், இரண்டு கட்சிகளும் தனியாக தத்தம் கூட்டணியை நிர்மாணித்தன. திமுக எதிர்ப்பு வாக்குகள் இவ்வாறு சிதறியதில் தற்போது 2 கட்சிகளும் அதன் பலனை வேதனையுடன் அறுவடை செய்திருக்கின்றன. இதனை பாஜக ஆதரவு யூடியூபரான மாரிதாஸ் தனது எக்ஸ் பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார். தனது விமர்சனக் கருத்துக்களுக்காக, தமிழக பாஜகவின் சிலர் வார் ரூமை பயன்படுத்தி தன்னை இழிவுபடுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
“உன்னால நான் கெட்டேன் என்னால நீ கெட்ட. இதுதான் தமிழகத்தில் அதிமுக - பாஜக நிலை. தமிழ்நாடு பாஜக - அதிமுக கூட்டணி உடைய கூடாது; கூடுதல் பொறுப்போடு அணுக வேண்டும் எனக் கேட்டுக் கொண்ட என் போன்றவர்களை அந்த நேரத்தில், வார் ரூம் வைத்துத் திட்டி தீர்த்தார்கள். அவர்கள் அனைவருக்கும் நான் சொல்ல விரும்புவது ஒரு உண்மை. அது உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றாலும் உங்கள் மனதுக்கு கசப்பாக இருப்பினும், அது உண்மை என்பதால் அதை ஏற்று, அதில் உரியத் திருத்தம் செய்து, வெற்றியைச் சிந்தித்திருக்க வேண்டியது அரசியல் அவசியமாகிறது" என்று மாரிதாஸ் பதிவிட்டிருக்கிறார்.
No comments:
Post a Comment