சோழவரம் ஒன்றியம் சின்னம்பேடு என்று அழைக்கப்படும் சிறுவாபுரி கோவிலில் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் திடீர் ஆய்வு
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், சின்னம்பேடு என்று அழைக்கப்படும் சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் உள்ளது.இக்கோவிலுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் மகா கும்பாபிஷேகம் செய்தனர். இதன் பின்னர்,இக்கோவிலில் பக்தர்களின் கூட்டம் நாளுக்கு,நாள் கட்டுக்கடங்காத வகையில் கூடிக்கொண்டே உள்ளது. இக்கோவிலில் மரகதகலால் ஆன மயில்,விநாயகர் உள்ளிட்ட தெய்வங்கள் இருப்பதும்,திருமண கோலத்தில் வள்ளி மணவாளன் காட்சியளிப்பதும் கூடுதல் சிறப்பு ஆகும். இக்கோவிலுக்கு தொடர்ந்து ஆறு வாரங்கள் ஏதாவது ஒரு குறிப்பிட்ட நாளில் வந்து நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் பக்தர்களின் வேண்டுதல்கள் நிறைவேறும் என்பது நம்பிக்கையாக உள்ளது.
இந்நிலையில், இக்கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பல்வேறு வகையான இன்னல்கள் ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்த வண்ணம் உள்ளது. எனவே,இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்யவும்,குடிநீர்,கழிவறை, வாகன நிறுத்துமிடம்,சாலை வசதி,வாகன போக்குவரத்து வசதி,நிழற்குடை வசதி, பேட்டரி கார் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்று பக்தர்களும்,சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்த வண்ணம் உள்ளனர். மேலும்,வருவாய் துறை,காவல் துறை,இந்து சமய அறநிலையத்துறை ஆகிய மூன்று துறைகளும் கலந்தாய்வு மேற்கொண்டு உரிய தீர்வு ஏற்படுத்தி தரவேண்டும் என்று கூறி வருகின்றனர்.இந்நிலையில், நேற்று திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் பிரபுசங்கர் தலைமையில் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசபெருமாள்,திருவள்ளூர் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார்,உதவி ஆட்சியர் ஆயூஷ்குப்தா,ஊத்துக்கோட்டை டிஎஸ்பி கணேஷ்குமார்,மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி சுரேஷ்பாபு,வேலூர் மண்டல இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர் கருணாநிதி ஆகியோர் இத்திருக்கோவிலுக்கு திடீரென்று நேரில் வந்து பார்வையிட்டனர்.
மேலும்,பக்தர்களின் அடிப்படை வசதிகள் என்னென்ன அவற்றை எவ்வாறு? செய்து கொடுப்பது என்று ஆய்வு செய்தனர். மேலும்,விரைவான போக்குவரத்துக்கு செய்ய வேண்டிய பணிகள் என்னென்ன என்று ஆலோசனைமேற்கொண்டனர்.மேலும்,இந்த அடிப்படை வசதிகளை விரைவாகவும்,சிறப்பாகவும் பக்தர்களுக்கு எப்படி? செய்து கொடுப்பது என்று ஆலோசனை மேற்கொண்டனர்.எனவே, போக்குவரத்தை மேம்படுத்தவும் வாகனங்களை நிறுத்துவதற்கு தேவையான இடத்தை ஒதுக்கவும் தனியார் நிலத்தை விலைக்கு வாங்குவது என்பது போன்ற பல்வேறு ஆலோசனைகளை மேற்கொண்டனர்.இதன்படி இன்னும் இரண்டு மாதங்களில் இப்பணிகளை முடித்து பக்தர்கள் விரைவாகவும், மனதிருப்த்தியோடும் தரிசனம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் கூறினர்.
இந்நிகழ்ச்சியில்,பொன்னேரி தாசில்தார் மதிவாணன், பொன்னேரி நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் பாலச்சந்திரன், சோழவரம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாந்தினி, பார்த்தசாரதி,மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பிரகாஷ்,போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் வெங்கடேசன்,வடிவேல் முருகன்,திருக்கோயிலின் செயல் அலுவலர் கார்த்திகேயன்,தலைமை எழுத்தர் திருவேணி, திருக்கோவில் ஆய்வாளர் கலைவாணன் மற்றும் பல்வேறு அரசு துறையை சேர்ந்த அதிகாரிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள்,பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் உடன் இருந்தனர்.நேற்று ஆனி மாத செவ்வாய்க்கிழமை என்பதால் விடியற்காலை முதலே இக்கோவிலுக்கு பக்தர்கள் கூட்டம் வந்த வண்ணம் இருந்தது.
இதனால் கோவிலின் பின்பகுதியில் உள்ள அன்னதான மண்டபம் வரையில் பக்தர்கள் நீண்ட வரிசையில் சுமார் 4 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். விடியற்காலை மூலவருக்கு பால்,தயிர், இளநீர்,தேன் உள்ளிட்ட 16 வகையான திரவியங்களால் ஆனந்தன் குருக்கள் தலைமையில் அபிஷேகம் செய்தனர். இதன்பின்னர்,மூலவருக்கு ராஜ அலங்காரம் செய்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
No comments