• Breaking News

    கம்பம் பள்ளத்தாக்கு விவசாயத்திற்காக முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது

     

    முல்லைப் பெரியாறு அணையின் தண்ணீர் தமிழக ஐந்து மாவட்ட விவசாயிகள் விவசாயத்திற்காகவும், குடிநீருக்காகவும் நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது.ஒவ்வொரு வருடமும் தமிழக அரசு சார்பில் தேக்கடியில் இருந்து பொதுப்பணித்துறை மதகை தமிழக விவசாயத்திற்கு குடிநீருக்கும் திறக்கப்படுவது வழக்கம். 

    முல்லைப்பெரியார் அணையில் இருந்து 105 அடிக்கு மேல் நிரம்பி வரும் தண்ணீரை மட்டுமே தமிழகத்திற்கு கொண்டு செல்ல மதகு அமைக்கப்பட்டுள்ளது. இந்த மதகு தமிழக பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த நிலையில் முல்லைப் பெரியாறு அணையிலிருந்து முதல் போக சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விட தமிழக அரசு நேற்று உத்தரவிட்டது. 

    அதன் படி தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு இருபோக ஆயக்கட்டு பகுதிகளில் முதல் போகத்திற்கு 14707 ஏக்கர் நிலங்களுக்கு வினாடிக்கு 200 கனஅடி வீதமும், தேனி மாவட்ட குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 100 கனஅடி தண்ணீரும், மொத்தம் வினாடிக்கு 300 கன அடி தண்ணீரை இன்று முதல் 120 நாட்களுக்கு தேவைக்கேற்ப நீர் இருப்பு மற்றும் நீர் வரத்தைப் பொறுத்து முல்லை பெரியாறு அணையிலிருந்து திறந்துவிட தமிழக அரசு உத்தரவிட்டது. 

    அதன் படி இன்று காலை முல்லைப் பெரியாறு அணை தண்ணீரை அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் தேக்கடிக்கு வந்து, மதகு முன்பு சிறப்பு பூஜைகள் செய்து, மலர்தூவி 300 கன அடி தண்ணீர் திறந்து வைத்தனர். 

    இதன் மூலம் தேனி வட்டத்தில் 2 ஆயிரத்து 412 ஏக்கர், உத்தமபாளைய வட்டத்தில் 11 ஆயிரத்து 807 ஏக்கர், போடி வட்டத்தில் 488 ஏக்கர் என மொத்தம் 14 ஆயிரத்து 707 ஏக்கர் நன்செய் நிலங்களில் முதல் போக சாகுபடி நடைபெறும். 

    முதல் போக சாகுபடிக்கான நீர் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு ஏதுவாக இன்று முதல் தண்ணீர் திறக்கப்பட்டதால் தேனி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதியைச் சார்ந்த விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

    No comments