அமைச்சர், கலெக்டரின் அதிரடி உத்தரவால் அரசு டாஸ்மாக் கடை மூடல்...... திமுக, அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம் பள்ளி மாணவர்கள் மகிழ்ச்சி
செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் அடுத்த கண்டிகைலிருந்து வேங்கடமங்கலம் செல்லும் சாலை ஓரத்தில் அரசு மேல்நிலை பள்ளி உள்ளது. இதனிடையே 4197 என்ற அரசு டாஸ்மாக் கடை கடந்த 10 ஆண்டுகளாக இயங்கி வந்தன. மேலும் 24 மணி நேரமும் டாஸ்மாக் பார் திறந்து வைத்து கள்ளத்தனமாக மதுபானம் விற்று வந்தனர்.
இதில் டாஸ்மாக் கடைக்கு வரும் மதுபான பிரியர்கள் மதுபானங்களை குடித்துவிட்டு சாலையிலேயே படுத்து தூங்குவதும், சாலையில் செல்லும் இளம் பெண்கள், மாணவிகளை பாட்டு பாடி கிண்டல் செய்வதும், கலாட்டாவில் ஈடுபட்டும் வந்தனர். இதனால் மாணவிகள், இளம் பெண்கள் கடும் அவதிப்பட்டனர். மேலும் இதில் பள்ளியை ஒட்டியபடி அரசு டாஸ்மாக் கடை அமைத்ததால் ஆரம்பத்திலிருந்து பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கிராம சபை கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு மனு கொடுத்தும், பல்வேறு போராட்டங்களை நடத்தியும் வந்தனர். ஆனால் அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை.
இதனை அடுத்து திமுக ஒன்றிய கவுன்சிலர் ஏவிஎம் இளங்கோவன், நல்லம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமணன், துணை தலைவர் ஹேமமாலினிவாசு, வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கடந்த மாதம் சென்று காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் சிறு-குறு மற்றும் தொழில் நிறுவனங்களின் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம், செங்கல்பட்டு தொகுதி எம்எல்ஏ வரலட்சுமிமதுசூதனன், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் ஆகியோரை நேரில் சந்தித்து மேற்படி டாஸ்மாக் கடையை அகற்ற கோரி மனு கொடுத்து வலியுறுத்தினர். இதனை அடுத்து அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் ஆகியோர் பள்ளி மாணவர்களுக்கு இடையூறாக உள்ள மேற்படி டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய அதிரடியாக உத்தரவிட்டனர்.
அதன் பேரில் மேற்படி டாஸ்மாக் கடை நேற்று மூடப்பட்டன. இதுகுறித்து தகவல் அறிந்ததும் திமுக ஒன்றிய கவுன்சிலர் ஏவிஎம் இளங்கோவன், நல்லம்பாக்கம் அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமணன், திமுக துணை தலைவர் ஹேமமாலினிவாசு, வார்டு உறுப்பினர்கள் மற்றும் திமுக அதிமுகவினர் உட்பட பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டு சென்று டாஸ்மாக் கடை முன்பும், அரசு பள்ளி முன்பும், இதேபோல் வண்டலூர்-கேளம்பாக்கம் சாலையிலும் பட்டாசுகளை வெடித்து, பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினர். இதனால் மாணவ, மாணவிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
No comments