• Breaking News

    பொன்னேரி அருகே அரசு பள்ளியில் ஆசிரியர்கள் பற்றாக்குறையை கண்டித்து மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம்.... 3 அரசு பேருந்துகள் சிறை பிடிப்பு....


    திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த அண்ணாமலைச்சேரி கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் 250க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். 10ஆம் வகுப்பு வரை உள்ள இந்த பள்ளியில் அண்மைக்காலமாக ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவி வருவதாகவும், நியமிக்கப்பட்டுள்ள ஆசிரியர்களும் முறையாக பணிக்கு வருவதில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆசிரியர்கள் பற்றாக்குறை குறித்து பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து பள்ளிக்கு எதிரே சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாணவர்களுடன் இணைந்து பெற்றோர்களும் கிராமத்திற்கு வந்த 3அரசு பேருந்துகளை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

    மாணவர்களின் வாழ்க்கைக்கு அடித்தளமாக விளங்கும் பள்ளி கல்வித்துறையில் நிலவி வரும் ஆசிரியர் பற்றாக்குறையை உடனடியாக போக்கிட வேண்டும் எனவும், தமிழ்நாட்டின் கடைக்கோடி கிராமமாக அமைந்துள்ளதால் பணியமர்த்தப்பட்டும் வர மறுக்கும் ஆசிரியர்கள் மீது தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பெற்றோர்கள் கோரிக்கை வைக்கின்றனர். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களிடம் காவல்துறை மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். வகுப்புகளை புறக்கணித்து மாணவர்கள் சாலையில் அமர்ந்து அரசு பேருந்துகளை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு நிலவி வருகிறது.

    No comments