இடிந்தது இந்தியர் இதயம்..... மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தகுதி நீக்கம்....
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகிறது. இதில் நேற்று (ஆக.,6) நடந்த மல்யுத்த போட்டியில், பெண்களுக்கான பிரீஸ்டைல், 50 கிலோ பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் சார்பில் வினேஷ் போகத் விளையாடினார். வழக்கமாக 53 கிலோ பிரிவில் களமிறங்கும் வினேஷ் போகத், முதன்முறையாக இப்பிரிவில் பங்கேற்றார். கியூபாவின் லோபசை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தி முதன்முறையாக பைனலுக்கு முன்னேறினார் வினேஷ் போகத். இதன்மூலம் தங்கம் அல்லது வெள்ளி பதக்கத்தை உறுதி செய்தார்.இந்த நிலையில், பைனலுக்கு முன்னதாக வினேஷ் போகத்தின் உடல் எடை 50 கிலோ 100 கிராம் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. 50 கிலோ பிரிவில் விளையாடும் வினேஷ் போகத் 100 கிராம் அளவிற்கு எடை கூடியதால், ஒலிம்பிக் விதிப்படி தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
இதனால் அவரது பதக்க வாய்ப்பு பறிபோனது; பைனலுக்கு முன்னேறிய அமெரிக்க வீராங்கனை சாராவுக்கு தங்கப்பதக்கம் அளிக்கப்படுகிறது. இப்பிரிவில் வெள்ளிப்பதக்கம் யாருக்கும் வழங்கப்படாது என ஒலிம்பிக் கமிட்டி தெரிவித்துள்ளது.நடப்பு ஒலிம்பிக்கில் இந்தியா இதுவரை 3 வெண்கலம் மட்டுமே வென்ற நிலையில், வெள்ளி அல்லது தங்கம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. வினேஷ் 100 கிராம் எடை கூடியதால் தகுதி நீக்கம் செய்யப்பட்டு, இந்தியாவின் பதக்க கனவு தகர்ந்ததால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். 'வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டது வருத்தமளிக்கிறது' என இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.இதனிடையே நீர்ச்சத்து குறைபாடு காரணமாக வினேஷ் போகத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். உடல் எடையை குறைக்க இரவு முழுவதும் கடுமையாக பயிற்சி செய்த வினேஷ் போகத் 1.85 கிலோ வரை எடை குறைத்ததாக தகவல் தெரிவிக்கின்றனர். ஆனாலும், நிர்ணயிக்கப்பட்ட 50 கிலோவை விட 100 கிராம் அதிகம் இருந்ததால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். கடுமையான பயிற்சி காரணமாக நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
மருத்துவமனையில் வினேஷ் போகத் சுயநினைவின்றி உள்ளதாக அவரது பெரியப்பாவும், பயிற்சியாளருமான மகாவீர் சிங் போகத் கூறியுள்ளார்.வினேஷ் போகத் தகுதி நீக்கம் விவகாரத்தில் வழிமுறைகளை பின்பற்றி என்ன வாய்ப்பு இருக்கிறது என்பதை விளக்கவும், ஒலிம்பிக் கமிட்டியிடம் இந்தியா சார்பில் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் எனவும் இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் பி.டி.உஷாவிடம் பிரதமர் மோடி தொலைபேசியில் வலியுறுத்தினார். இதனையடுத்து, வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து இந்திய ஒலிம்பிக் சங்கம் மேல்முறையீடு செய்துள்ளது.
No comments