• Breaking News

    எடப்பாடி பழனிச்சாமியை எந்த லிஸ்டில் சேர்ப்பது எனப் புரியவில்லை - ஆ.ராசா

     

    அதிமுகவை போல பாஜகவுடன் கள்ளக் கூட்டணி வைக்க திமுகவுக்கு அவசியம் இல்லை என இபிஎஸ்க்கு ஆ.ராசா பதிலடி கொடுத்துள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்பது அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு என்னதான் பிரச்சனை என திமுக துணைப் பொதுச் செயலாளரும் எம்.பியுமான ஆ. ராசா கேள்வி எழுப்புள்ளார்.

    மேலும் கருணாநிதியை ஒன்றிய அரசு கொண்டாடுவதையும் மேற்கு மாவட்ட மக்களின் நெடுங்கால கனவை திராவிட மாடல் அரசு நிறைவேற்றி இருப்பதையும் பொறுத்துக் கொள்ள முடியாமல் காந்தாரி போல கதறுகிறார் எடப்பாடி பழனிச்சாமி.

    பதட்டத்தில் அவர் பேசுவதெல்லாம் பிதற்றளாக உள்ளது எனவும் ஆ.ராசா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஆ.ராசா அவரது எக்ஸ் தளம் பக்கத்தில் கருணாநிதி நூற்றாண்டை சிறப்பிக்கும் வகையில் ஒன்றிய அரசு 100 ரூபாய் நாணயத்தை வெளியிட்டு சிறப்பித்து இருக்கிறது. இந்த விழாவுக்கு ராஜ்நாத் சிங் ஏன் வருகிறார்? ராகுல் காந்தியை ஏன் எதற்கும் அழைப்பதில்லை என்று எடப்பாடி பழனிசாமி கேட்டுள்ளார்.‌

    இந்தியாவில் நாணயம் மற்றும் ரூபாய் நோட்டுகளை வெளியிடுவது ஒன்றிய அரசு தான் என்பதால் ஒன்றிய அரசின் பாதுகாப்பு துறை அமைச்சராக உள்ள ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு சிறப்பிப்பதில் என்ன பிரச்சனை எடப்பாடி பழனிசாமிக்கு என்றும் அவர் கூறியுள்ளார்.

    கருணாநிதி உருவம் பொறித்த நாணயத்தில் இந்தி எழுத்து ஏன் இருக்கிறது என்று எடப்பாடி பழனிசாமி கேட்பதால் அவருக்கு என்ன ஆச்சு என்ற கவலை மேலும் அதிகரிக்கிறது. இந்தியாவில் உள்ள நாணயங்கள் எதுவாக இருந்தாலும் அதில் ஆங்கிலமும், இந்தியும் இருப்பது வழக்கம். அதிமுகவை உருவாக்கிய எம் ஜி ஆர் அவர்களுக்கு நாணயம் வெளியிடப்பட்டிருப்பதையும் அதிலும் இந்தி எழுத்துக்கள் இருப்பதையும் கூட எடப்பாடி பழனிச்சாமி அறியவில்லையா?. கருணாநிதிக்காக வெளியிடப்பட்ட நாணயத்தில் தான் தமிழ் வெல்லும் என்று எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளது. இது கூட உணராமல் எடப்பாடி பழனிச்சாமி உளறி இருப்பதால் அவரை எந்த லிஸ்டில் சேர்ப்பது எனப் புரியவில்லை என்று ஆ.ராசா கூறியுள்ளார்.

    No comments