• Breaking News

    வங்கதேசம்: தொடரும் ஹிந்துக்கள் மீதான தாக்குதல்.... இந்தியாவுக்கு வர பலர் முயற்சி.....


     வங்கதேசத்தில் இருந்து ஷேக் ஹசீனா பதவி விலகி நாட்டை விட்டு வெளியேறிய பிறகும், ஹிந்துக்கள் வீடுகள் மீதான தாக்குதல் தொடர்கிறது. இதனால் ஹிந்துக்கள் பலர் இந்தியாவுக்கு வர முயற்சி செய்கின்றனர்.

    வங்கதேசத்தில் வசிக்கும் 17 கோடி பேரில் 8 சதவீதம் பேர் ஹிந்துக்கள். இவர்கள் பெரும்பாலும் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியை ஆதரித்து வந்தனர். மற்ற கட்சிகளை காட்டிலும் அவாமி லீக் கட்சியின் கொள்கை, ஹசீனாவின் இந்தியா உடனான உறவு காரணமாக ஹிந்துக்கள் அவரை ஆதரித்து வந்தனர். ஹசீனாவிற்கு எதிராக எதிர்ப்பு கிளம்பி போராட்டம் வெடித்த நிலையில் ஹிந்துக்களின் வீடுகள், கோயில்கள், வணிக வளாகங்களை குறிவைத்து வன்முறையாளர்கள் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், அங்கு அவர்கள் அச்சத்துடனேயே வசித்து வருகின்றனர்.

    ஹசீனாவிற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், ஹிந்துக்களின் பாதுகாப்பு குறித்து அச்சம் தெரிவித்ததுடன் வன்முறையில் ஈடுபட வேண்டாம் என கோரிக்கை விடுத்த போதிலும் வன்முறையாளர்கள் யாரும் அதனை கண்டுகொள்ளவில்லை. அந்நாட்டின் எதிர்க்கட்சியான கலீதா ஜியாவின் பிஎன்பி கட்சி தலைவர் ஒருவரும் , ‛ யாரும் வன்முறையில் ஈடுபட வேண்டாம். அமைதி காக்க வேண்டும் ' எனக்கூறியுள்ளார்.

    வங்கதேச வாழ் ஹிந்துக்கள் கிறிஸ்தவர்கள், புத்த மதத்தினர் ஒற்றுமை கவுன்சில் வெளியிட்ட அறிக்கையில், கடந்த திங்கட்கிழமை முதல் நடந்து வரும் தாக்குதலில் ஹிந்துக்களுக்கு சொந்தமான வீடுகள் மற்றும் வணிக வளாகங்கள் குறிவைத்து தாக்குதல் நடத்தப்படுகிறது. 20 ஹிந்து கோயில்கள் சேதப்படுத்தப்பட்டு உள்ளன. 40 பேர் லேசான காயமடைந்துள்ளனர்.22 மாவட்டங்களில் ஹிந்துக்களின் வீடுகள் மற்றும் சொத்துகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்து உள்ளனர்.இந்த வன்முறை சம்பவங்களுக்கு மத்தியில், டாக்கா நகரில் உள்ள சில கோயில்களை ஹிந்துக்களும், முஸ்லிம்களும் இணைந்து பாதுகாத்து வருகின்றனர்.

    இஸ்கான் ஸ்வாமிபாக் கோயிலில் பாதுகாவலர்கள் யாரும் இல்லாவிட்டாலும், அங்கு ஒட்டப்பட்ட சுவரொட்டி ஒன்றில், ‛‛ பயம் வேண்டாம். நீங்கள் எங்களது சகோதரர்கள். வங்கதேசம் அனைவருக்குமானது '' என அதில் கூறப்பட்டு உள்ளது.இதனிடையே, டாக்காவில் உள்ள இந்திய தூதரகத்தில் பணியாற்றும் அத்தியாவசியம் இல்லாத ஊழியர்கள் குடும்பத்தினருடன் நாடு திரும்பி வருகின்றனர். ஹிந்துக்கள் பலரும் இந்தியாவுக்கு வர முயற்சிக்கின்றனர்.ரங்பூர் மாவட்டத்தில் கஜல் ராய் என்ற ஹிந்து கவுன்சிலரை வன்முறையாளர்கள் சுட்டுக்கொன்ற கொடூரம் அரங்கேறியுள்ளது.

    No comments