காதலனுக்கு விஷம் வைத்து கொலை செய்த காதலி.... தண்டனை விவரத்தை இன்று அறிவிக்கிறது நீதிமன்றம்
கேரள மாநிலம் பாறசாலையை சேர்ந்தவர் ஷாரோன் ராஜ் (வயது25). இவர் குமரி மாவட்டம் நெய்யூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வந்தார். இவர் களியக்காவிளையை அடுத்த ராமவர்மன்சிறையை சேர்ந்த கிரீஷ்மா (22) என்ற கல்லூரி மாணவியை காதலித்து வந்தார். இருவரும் தீவிரமாக காதலித்து வந்த நிலையில் திற்பரப்பு, திருவனந்தபுரம் உள்பட பல்வேறு இடங்களுக்கு ஜாலியாக சுற்றி வந்தனர்.
இந்தநிலையில் கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 14- ந் தேதி ஷாரோன் ராஜ்-க்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் 11 நாட்களுக்குப் பின்னர் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.இந்தநிலையில் தங்களுடைய மகனை அவரது காதலி கிரீஷ்மா தான் விஷம் கொடுத்து கொலை செய்தார் என்று ஷாரோன் ராஜின் பெற்றோர் பாறசாலை போலீசில் புகார் செய்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அத்துடன் இந்த வழக்கு திருவனந்தபுரம் குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது.குற்றப்பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில் ஷாரோன் ராஜை காதலி கிரீஷ்மா தனது வீட்டுக்கு வரவழைத்து கசாயத்தில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்தது தெரியவந்தது. மேலும் இந்த கொலைக்கு கிரீஷ்மாவின் தாய் சிந்து மற்றும் தாய்மாமா நிர்மல் குமார் ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளனர்.இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு நெய்யாற்றின்கரை கூடுதல் அமர்வு கோர்ட்டில் நடைபெற்று வந்தது.
தற்போது இந்த வழக்கில் இறுதிக்கட்ட விசாரணை முடிந்தது. இதையடுத்து இந்த வழக்கில் நேற்று (ஜன. 17-ந் தேதி) தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கிய நெய்யாற்றின்கரை கூடுதல் அமர்வு கோர்ட்டு ஷாரோன் கொலை வழக்கில் கிரீஷ்மா மற்றும் விஷம் வாங்கிகொடுத்த அவரது தாய்மாமா நிர்மல் குமார் அகியோர் குற்றவாளிகள் என அறிவித்தது.
இரண்டாம் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த கிரீஷ்மாவின் தாய் சிந்துவை வழக்கில் இருந்து விடுவித்து கோர்ட்டு உத்தரவிட்டது.
இந்நிலையில் குற்றவாளிகளுக்கான தண்டனை விவரங்கள் இன்று (சனிக்கிழமை) அறிவிக்கப்படும் என்று கோர்ட்டு தெரிவித்துள்ளது.
No comments