ஒரே நாளில் 7,667 பேர் பயணம்.... புதிய சாதனை படைத்த திருச்சி விமான நிலையம்.....
பயணிகளை கையாள்வதில் மே 1 அன்று ஒரே நாளில் 7,667 பயணிகளை கையாண்டு திருச்சி விமான நிலையம் புதிய உச்சத்தை எட்டி சாதனை படைத்துள்ளது.
திருச்சி விமான நிலையத்தில் இருந்து மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, சார்ஜா, துபாய், அபுதாபி, குவைத், தம்மாம், பாங்காக், மஸ்கட், தோஹா உள்ளிட்ட வெளிநாட்டு நகரங்களுக்கு சர்வதேச பயணிகள் விமானங்களும், சென்னை, மதுரை, மும்பை, பெங்களூரு, ஹைதராபாத் உள்ளிட்ட பல்வேறு முக்கிய நகரங்களுக்கு உள்நாட்டு விமான போக்குவரத்தும் நடைபெற்று வருகிறது.மே 1 அன்று பல்வேறு வெளிநாடுகளிலிருந்து திருச்சிக்கு வருகை தந்த 17 விமானங்களில் 2,669 பயணிகள் திருச்சிக்கு வருகை புரிந்தனர்.
அதே சமயம், அன்றைய தினம் திருச்சியிலிருந்து பல்வேறு வெளிநாடுகளுக்கு புறப்பட்டுச் சென்ற 16 விமானங்களில் 2,425 பயணிகள் சென்றனர்.இதேபோல, பல்வேறு இந்திய நகரங்களிலிருந்து திருச்சிக்கு மே 1 அன்று வருகை தந்த 14 விமானங்களில் 1,408 பயணிகள் வந்தனர். மேலும், திருச்சியிலிருந்து புறப்பட்டுச் சென்ற 15 விமானங்களில் 1,165 பயணிகள் நாட்டின் பல்வேறு நகரங்களுக்கு பயணித்தனர்.அதன்படி, மே 1 அன்று மட்டும் 5,094 வெளிநாட்டு பயணிகள், 2,573 உள்நாட்டு பயணிகள் என மொத்தம் 7,667 பயணிகளை கையாண்டு திருச்சி விமான நிலையம் புதிய உச்சத்தை எட்டி சாதனை படைத்துள்ளது. மேலும், 2,573 உள்நாட்டு பயணிகளை கையாண்டதும் இதுவரை இல்லாத புதிய உச்சம் ஆகும்.
கோடை விடுமுறை காரணமாக உள்நாட்டு விமான பயணிகள் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. இதனால் மே மற்றும் ஜூன் மாதம் 2 லட்சத்துக்கும் அதிகமான பயணிகளை கையாண்டு திருச்சி விமான நிலையம் மேலும் ஒரு புதிய உச்சத்தை எட்டும் என திருச்சி விமான நிலைய அலுவலர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
இதற்கு முன்பு கடந்த ஜன.11 அன்று 33 வெளிநாட்டு விமான சேவைகள், 25 உள்நாட்டு விமான சேவைகள் என மொத்தம் 58 விமான சேவைகள் மூலம் 5,424 வெளிநாட்டு பயணிகள், 1,959 உள்நாட்டு பயணிகள் என மொத்தம் 7,383 விமான பயணிகளை கையாண்டது திருச்சி விமான நிலையத்தின் முந்தைய சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
No comments