ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் கொலை, கொள்ளை சம்பவம்..... குற்றவாளிகளை விரைந்து பிடித்த காவல் அதிகாரிகள்,காவலர்களுக்கு முதலமைச்சர் வாழ்த்து,பாராட்டு...... - MAKKAL NERAM

Breaking

Tuesday, May 20, 2025

ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் கொலை, கொள்ளை சம்பவம்..... குற்றவாளிகளை விரைந்து பிடித்த காவல் அதிகாரிகள்,காவலர்களுக்கு முதலமைச்சர் வாழ்த்து,பாராட்டு......

 


 தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (20.5.2025) தலைமைச் செயலகத்தில், ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நடைபெற்ற கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடித்து, களவுச் சொத்துகளை மீட்ட காவல் கண்காணிப்பாளர், உதவி கண்காணிப்பாளர் மற்றும் காவல் துறை அலுவலர்களை நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்து, பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.

ஈரோடு மாவட்டம், சிவகிரியில் கடந்த 28.04.2025-அன்று உச்சிமேடு மேகரையான் தோட்டம் என்ற இடத்தில் தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்த ராமசாமி (72) மற்றும் பாக்கியம் (63) ஆகிய வயதான தம்பதியரை கொலை செய்து சுமார் 10 3/4 (பத்தேமுக்கால்) சவரன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்த சம்பவம்:

திருப்பூர் மாவட்டம், அவிநாசிபாளையம், சேமலைக்கவுண்டன் பாளையத்தில் 28.11.2024-அன்று இரவு, தெய்வசிகாமணி (78), அவரது மனைவி அலமாத்தாள் (74) மற்றும் அவர்களது மகன் செந்தில்குமார் (44) ஆகியோரை கொலை செய்து, அவர்களிடமிருந்து 5 1/2 (ஐந்தரை) சவரன் தங்க நகைகள் மற்றும் ஒரு மொபைல் போன் ஆகியவற்றை கொள்ளையடித்த சம்பவம்;

மேற்படி கொலை, கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட நபர்களை கைது செய்து, விசாரணை செய்ததில் குற்றவாளிகள் இக்குற்ற சம்பவத்தை ஒப்புக்கொண்டனர். மேலும், இக்குற்றவாளிகள் வேறு சில கொலை, கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டதாகவும் தெரிவித்துள்ளனர். இவை குறித்தும் தொடர் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இக்குற்றசம்பவங்களை விரைந்து, புலனாய்வு செய்து குற்றவாளிகளை கைது செய்த, காவல்துறை தலைவர் (மேற்கு மண்டலம்) கோயம்புத்தூர் த. செந்தில்குமார், இ.கா.ப., கோயம்புத்தூர் சரக காவல் துணைத் தலைவர் டாக்டர் வி. சசிமோகன், இ.கா.ப., ஆகியோர் தலைமையிலான புலனாய்வு குழுவில் இடம்பெற்ற ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அ. சுஜாதா, பெருந்துறை காவல் உபகோட்ட துணை கண்காணிப்பாளர்  ஆர். கோகுலகிருஷ்ணன், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், தலைமைக் காவலர்கள் மற்றும் காவலர்களை தமிழ்நாடு முதலமைச்சர் இன்றையதினம் தலைமைச் செயலகத்திற்கு நேரில் அழைத்து பாராட்டி, வாழ்த்து தெரிவித்தார்.

இந்நிகழ்வின்போது, தலைமைச் செயலாளர் . நா. முருகானந்தம், இ.ஆ.ப., உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு. தீரஜ்குமார், இ.ஆ.ப., காவல் துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால், இ.கா.ப., கூடுதல் காவல்துறை இயக்குநர் (சட்டம் மற்றும் ஒழுங்கு)  சௌ. டேவிட்சன் தேவாசிர்வாதம், இ.கா.ப., மற்றும் காவல்துறை உயர் அலுவலர்கள் உடனிருந்தனர். 

மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி - 9965162471 ,  6382211592 .

No comments:

Post a Comment