நாகை அருகே தாய் தந்தை இருவரையும் இழந்து நிற்கதியாக நிற்கும் நான்கு பெண் குழந்தைகள்..... தேவையான உதவிகளை செய்ய வேண்டுமென அரசுக்கு கண்ணீர் மல்க கோரிக்கை.......
நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஒன்றியம் மீனம்பநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட மெயின்ரோடு காலணிதெருவைச் சேர்ந்த மருதவீரையன்(51) -மாரியம்மாள் தம்பதியருக்கு நான்கு பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு மருதவீரையன் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்த நிலையில், தாய் மாரியம்மாளும் கடந்த மே மாதம் 27 ஆம் தேதி உயிரிழந்தார். கூலி வேலை மட்டுமே செய்து குடும்பத்தை காப்பாற்றி வந்த நிலையில் தாய் தந்தை இருவரையும் இழந்த நான்கு பெண் குழந்தைகள் தவிப்பிற்கு ஆளாகியுள்ளனர்.
தனது பாட்டியான சரோஜா என்பவரது ஆதரவோடு அங்குள்ள கூரை வீட்டில் வசித்து வருகின்றனர். பெற்றோர் இல்லாத காரணத்தால் படிப்பை தொடர முடியாத நிலையில் 12ஆம் வகுப்பு வரை மட்டும் படித்த மகாலட்சுமி,விஜி ஆகிய இருவரும் வேளாங்கண்ணியில் உள்ள கடைக்கு வேலைக்கு சென்று வருகின்றனர்.10 வகுப்பு பாதியிலேயே மூன்றாவது மகள் சுஜிபிரியா படிப்பை நிறுத்திவிட்டார். இந்நிலையில் எட்டாம் வகுப்பு படித்து வந்த தர்ஷினி யை தொண்டு நிறுவனம் (காந்திய காமராஜர் மக்கள் தொண்டு நிறுவனம்) மூலம் தற்பொழுது திருப்பூண்டியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். தனது தாயாரின் படதிறப்பு விழாவை கூட நடத்த பணம் இல்லாமல் தவித்த சூழலில் தொண்டு நிறுவனத்தின் உதவியோடு இன்று படதிறப்பு விழா நடைபெற்றது. மூன்று வருடங்களுக்கு முன்பு தந்தையை இழந்து தற்பொழுது தாயையும் இழந்து கண்ணீரோடு தவிக்கும் 4 பெண் குழந்தைகள் கதறி அழுதது காண்போர் கண்களை கலங்க வைத்தது.
மேலும் இவர்கள் வசிக்கும் கூரை வீடு மிகவும் சேதமடைந்து பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது. ஆகவே நான்கு குழந்தைகளுக்கும் தேவையான உதவியை தமிழக அரசு செய்து தர வேண்டும். மேலும் படிப்பை பாதியிலேயே விட்ட குழந்தைகள் உயர்கல்வி தொடர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுமட்டுமின்றி வீடு கட்டி தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கையாக உள்ளது.
கீழ்வேளூர் தாலுகா நிருபர் த.கண்ணன்
No comments