• Breaking News

    முருக பக்தர்கள் மாநாட்டு ஆன்மிக பாடலை நயினார் நாகேந்திரன் வெளியிட்டார்


     மதுரையில் இந்து முன்னணி சார்பில் வருகிற 22-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) பாண்டிக்கோவில் சாலையில் உள்ள அம்மா திடலில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து அரசியல் தலைவர்கள், ஆன்மிகவாதிகள், ஆதீனங்கள் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.

    சிறப்பு விருந்தினர்களாக, உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், ஆந்திர துணை முதல்-மந்திரி பவன் கல்யாண் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசுகின்றனர். இந்த மாநாட்டுக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. அன்றைய தினத்தில் காவடி, பால்குடம், தேர் இழுக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    இதுபோல், மாலை 6 மணி அளவில் லட்சக்கணக்கானோர் ஒரே நேரத்தில் கந்த சஷ்டி கவசம் படித்து கின்னஸ் சாதனையும் படைக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த மாநாட்டு திடலில் அறுபடை முருகன் கோவில்களின் மாதிரி கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. அறுபடை வீடு கோபுர முகப்பும், உள்ளே சென்றால் கோவில் பிரகாரம் போன்றும், தனி சன்னதிகளில் வேல்களுடன், அறுபடை வீடு மூலவர்களை தத்ரூபமாக வடிவமைத்து பக்தர்கள் வழிபட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாநாடு நடைபெறும் 22-ந்தேதி இரவு வரை பொதுமக்கள் அனைவரும் அறுபடை வீடுகளின் மாதிரியை பார்வையிடலாம் என நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    இந்ந நிலையில் மதுரையில் நடைபெற உள்ள முருக பக்தர்கள் மாநாட்டு ஆன்மிக பாடலை இன்று சென்னை பாஜக தலைமை அலுவலகத்தில் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டார். அருகில் தமிழிசை சௌந்தர்ராஜன், சுதாகர்ரெட்டி, கரு.நாகராஜன், கராத்தே தியாகராஜன், நாராயணன் திருப்பதி உள்ளிட்ட நிர்வாகிகள் இருந்தனர்.

    No comments