• Breaking News

    கொத்தனாருடன் விடுதி அறையில் தங்கிய பெண்ணை மிரட்டி பணம் பறித்த பக்கத்து வீட்டு பெண்

     


    தேனி அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த 38 வயது பெண் கட்டுமான தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். அவருக்கு திருமணம் ஆகிவிட்டது. இந்தநிலையில், அவர் கட்டிட வேலைக்கு சென்ற போது வெளியூரை சேர்ந்த கொத்தனார் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் நெருங்கி பழகி வந்தனர்.

    சில மாதங்களுக்கு முன்பு விருதுநகரில் நடந்த உறவினர் வீட்டு விழாவுக்கு அந்த பெண்ணும், கொத்தனாரும் ஒன்றாக சென்றனர். அங்கு அவர்கள் ஒரு விடுதியில் அறை எடுத்து தங்கினர். இந்த விவரத்தை எப்படியோ அந்த பெண்ணின் பக்கத்து வீட்டில் வசிக்கும் 40 வயது பெண் தெரிந்து கொண்டார். அந்த பெண் தொழிலாளியை சந்தித்த, பக்கத்து வீட்டு பெண், 'நீயும் கொத்தனாரும் விடுதியில் ஒன்றாக இருந்த வீடியோ சி.டி. என்னிடம் உள்ளது. அதை கொத்தனாரின் மனைவியிடம் கொடுக்கப் போகிறேன்' என்றார்.

    அதைக்கேட்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். இந்த விஷயம் வெளியே தெரிந்தால் தனக்கு மிகப்பெரிய அவமானம் ஏற்படும் என்று கருதினார். இதனால் சி.டி.யை யாரிடமும் கொடுக்காதீர்கள் என்று கெஞ்சினார். அதற்கு ரூ.10 லட்சம் கொடுத்தால் சி.டி.யை கொடுக்காமல் இருப்பேன் என்று மிரட்டினார். இதையடுத்து அவர் தனது பக்கத்து வீட்டு பெண்ணிடம் 7 பவுன் நகைகள் மற்றும் ரூ.2 லட்சத்தை கொடுத்தார்.

    இந்தநிலையில் அவர் பணம் கேட்டு மீண்டும் மிரட்டினார். அவர் தன்னிடம் பணம் இல்லை என்று சொன்னதால், அவருடைய நிலத்தை விற்று கொடுக்குமாறு மிரட்டினார். இதற்கிடையே பக்கத்துவிட்டு பெண்ணிடம் அதுபோல் சி.டி. எதுவும் இல்லை என்றும், அவர் பொய்யான தகவலை சொல்லி மிரட்டி பணம், நகை பறித்ததாகவும் தெரியவந்தது. அதனால் அவர் கொடுத்த பணம், நகைகளை திரும்ப கேட்டார்.

    அப்போது பக்கத்து வீட்டு பெண்ணும், அவருடைய மகனும் சேர்ந்து அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண் புகார் கொடுத்தார். அதன்பேரில் மிரட்டி பணம் நகைகள் பறித்த பெண் மற்றும் அவருடைய மகன் ஆகிய 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    No comments