பிசிசிஐ ஆண்டு வருமானம் ரூ.10000 கோடி..... வாயை பிளக்கும் கிரிக்கெட் ரசிகர்கள்.....
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) உலகின் பணக்கார கிரிக்கெட் வாரியமாக இருந்து வரும் நிலையில், கடந்த 2023-24 நிதியாண்டில் அதிரடியான வருமானம் ஈட்டியுள்ளது. வெளியான தகவலின்படி, கடந்த ஆண்டில் மட்டும் பி.சி.சி.ஐ-க்கு ரூ.9,741.7 கோடி வருமானம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில், இந்தியப் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடரால் மட்டும் ரூ.5,761 கோடி வருமானம் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது, மொத்த வருமானத்தின் 59 சதவீதம் ஆகும். 2007-ம் ஆண்டு தொடங்கிய ஐ.பி.எல் தொடர், நாளுக்குநாள் வலுப்பெற்று வளர்ந்துவருகிறது.
இந்திய வீரர்கள் மட்டுமின்றி உலகம் முழுவதிலும் இருந்து முக்கியமான டி20 வீரர்கள் பங்கேற்கும் இந்த தொடருக்கான வரவேற்பும் ரசிகர் ஆதரவும் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. இதன் மூலம் பி.சி.சி.ஐ-க்கு வரும் வருமானம் பல மடங்காக உயர்ந்துள்ளது.
ஐ.பி.எல் மட்டும் அல்லாமல், இந்தியாவில் நடைபெற்ற சர்வதேச போட்டிகளுக்கான ஒளிபரப்பு உரிமைகள் மூலமாகவும் பி.சி.சி.ஐ-க்கு ரூ.361 கோடி வரை வருமானம் வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய கிரிக்கெட் வாரியமான பி.சி.சி.ஐ-க்கு கிடைக்கும் இந்த அளவிலான வருமானத்தை பார்த்த ரசிகர்கள் மிகவும் ஆச்சரியத்தில் உள்ளனர். “ஒரு விளையாட்டு அமைப்புக்கே இத்தனை கோடிகள் வருமானமா?” என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
No comments