கர்நாடக முதல்வர் அலுவலகம் மூத்த நடிகை பி. சரோஜா தேவியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வெளியிட்ட செய்தி, பேஸ்புக்கின் தானியங்கி மொழிபெயர்ப்பு கருவியால் துல்லியமின்றி மொழிபெயர்க்கப்பட்டு, முதல்வர் சித்தராமையா இறந்துவிட்டதாக தவறாகக் காணப்பட்டது.
இதனால் பெரும் குழப்பமும், தவறான தகவல்களும் சமூக ஊடகங்களில் பரவியதைக் அறிந்த முதல்வர், மெட்டா நிறுவனம் கன்னட தானியங்கி மொழிபெயர்ப்பை இடைநிறுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
அசல் கன்னட பதிவில், நடிகை பி. சரோஜா தேவியின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக முதல்வர் வீட்டிற்கு சென்றதாக குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், அதனை ஆங்கிலத்தில் மெட்டாவின் மொழிபெயர்ப்பு, “முதல்வர் சித்தராமையா நேற்று காலமானார்…” எனத் தொடங்கியதால், இது பெரும் தவறான தகவலாக மாற்றியமைந்தது.
இதனை “தகவல்களைத் திருப்பும் அபாயகரமான நிலை” என கண்டித்த சித்தராமையா, சமூக ஊடகங்களில் கன்னட மொழி உள்ளடக்கங்களை துல்லியமாக மொழிபெயர்க்காமல் தானியங்கி முறையில் தவறாக அளிப்பது ஆபத்தானது என எச்சரிக்கை விடுத்தார்.
இந்த நிலையில், முதலமைச்சரின் ஊடக ஆலோசகர் கே.வி. பிரபாகர் மெட்டா நிறுவனத்திற்கு எழுதிய முறையான கடிதத்தில், கன்னட மொழியில் துல்லியத்துடன் மொழிபெயர்க்கும் வகையில் மொழி நிபுணர்களுடன் இணைந்து செயல்படுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும், தானியங்கி மொழிபெயர்ப்புகளைப் பயனர்கள் எச்சரிக்கையுடன் பயன்படுத்த வேண்டியது அவசியம் என்றும், அதிகாரப்பூர்வ தகவல்களில் இதுபோன்ற பிழைகள் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். மெட்டா இதுவரை பொது பதில் அளிக்கவில்லை என்றாலும், குறித்த பிழை புகாரளிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே சரிசெய்யப்பட்டது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment