அரசு வேலை மோகம்..... குரூப்-4 தேர்வில் ஒரு காலி இடத்துக்கு 353 பேர் போட்டி
தமிழக அரசுப் பணிகளில் கடந்த மே மாத நிலவரப்படி, 9 லட்சத்து 42 ஆயிரத்து 941 ஊழியர்கள் பணியாற்றி வந்தனர். அந்த மாதத்தில் மட்டுமே 58 வயதை கடந்த 8,100 ஊழியர்கள் ஓய்வு பெற்றனர். இப்படி ஒவ்வொரு துறைகளிலும் மாதந்தோறும் ஓய்வுபெறுவோரின் எண்ணிக்கை சராசரியாக இருப்பதால், காலிப் பணியிடங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இந்த காலிப் பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) மூலம் தேர்வு நடத்தி தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
அந்த வகையில், இன்று கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வனக்காப்பாளர், வனக்காவலர் போன்ற 3,935 காலிப் பணியிடங்களுக்கு குரூப்-4 தேர்வு நடத்தப்பட்டது.
இந்தத் தேர்வை 5 லட்சத்து 26 ஆயிரத்து 553 ஆண்கள், 8 லட்சத்து 63 ஆயிரத்து 68 பெண்கள், 117 திருநங்கைகள் என மொத்தம் 13 லட்சத்து 89 ஆயிரத்து 738 பேர், தமிழ்நாடு முழுவதும் உள்ள 38 மாவட்டங்களில் 314 மையங்களில் தேர்வு எழுதுகின்றனர்.
3,935 காலிப் பணியிடங்களுக்கு 13 லட்சத்து 89 ஆயிரம் பேர் தேர்வு எழுதுவது ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது. அதாவது, ஒரு காலிப் பணியிடத்துக்கு 353 பேர் போட்டிபோடுகின்றனர். "கால் காசு சம்பளம் என்றாலும் அரசு உத்தியோகமாக இருக்க வேண்டும்" என்று பழங்காலந்தொட்டே கூறிவருவதை நாம் கேள்வி பட்டிருக்கிறோம். அதனால்தான் என்னவோ, அரசு வேலைக்கு இத்தனை பேர் மல்லுகட்டுகின்றனர்.
No comments