ரூ.4,600 கோடி சொத்து உள்ள இந்தியாவின் பணக்கார நடிகை இவர்தான்
சினிமா துறையைப் பொறுத்தவரை, நடிகர்-நடிகைகளுக்கு பெயரும், புகழும் மட்டுமின்றி கோடிக்கணக்கில் பணமும் சம்பளமாகக் கிடைக்கிறது. இப்போது எல்லாம் ஒரு சில படங்கள் வெற்றி பெற்றாலே, நடிகர்-நடிகைகள் தங்கள் சம்பளத்தை 8 இலக்கங்களில் உயர்த்தி விடுகின்றனர். மிகச் சாதாரண பின்னணியில் இருந்து வந்தவர்கள் கூட பல ஆயிரம் கோடி சொத்து மதிப்புடன், தனி விமானம், சொகுசு கார்கள் என வலம் வருவதைப் பார்க்க முடிகிறது.
நடிகர்-நடிகைகளின் திறமைக்கு கிடைக்கும் ஊதியமாக இருந்தாலும், பிற துறைகளை விட அதிக பணம் கொட்டும் துறையாக சினிமா உள்ளது என்றால் மிகையல்ல. இந்தியாவின் பணக்கார நடிகராக ஷாருக்கான் உள்ளார் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயமே. அதே நேரத்தில், இந்தியாவில் பணக்கார நடிகை என்றால் உடனே உங்கள் நினைவுக்கு ஐஸ்வர்யா ராய், கத்ரீனா கைப், தீபிகா படுகோனே ஆகியோரின் பெயர்கள் வரலாம்.
ஆனால், இந்தப் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் கடந்த 13 ஆண்டுகளாக வெற்றிப் படமே கொடுக்காத ஒரு நடிகை. அவர் வேறு யாருமல்ல, இந்தியில் பிரபல நடிகையாக இருக்கும் ஜூஹி சாவ்லா தான். இவருக்கு ரூ.4,600 கோடிக்கும் அதிகமான சொத்து உள்ளது. ஹுருன் செல்வந்தர்கள் பட்டியல் - 2024 இதை உறுதி செய்துள்ளது.
1984 ஆம் ஆண்டு மிஸ் இந்தியா பட்டம் வென்ற ஜூஹி சாவ்லா, அடுத்த சில ஆண்டுகளிலேயே பாலிவுட்டில் நாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து, ஷாருக்கான் உள்ளிட்ட உச்ச நட்சத்திரங்களுடன் பல படங்களில் முன்னணி நடிகையாக நடித்தவர், 2010 ஆம் ஆண்டிற்குப் பிறகு குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிக்கத் தொடங்கிவிட்டார். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக வெற்றிப் படம் எதுவும் இல்லையென்றாலும், அவர் பணக்கார நடிகையாக இருப்பதற்கு, பல்வேறு தொழில்களில் முதலீடு செய்து அதன் மூலம் பல கோடி வருமானம் ஈட்டுவதே காரணம் என்று கூறப்படுகிறது.
தனது நெருங்கிய நண்பரான நடிகர் ஷாருக்கானின் ரெட் சில்லீஸ் தயாரிப்பு நிறுவனத்தின் இணைப் பங்குதாரராகவும், ரூ.9,150 கோடி மதிப்புள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் ரூ.620 கோடி வரை முதலீடு செய்துள்ளாராம். இப்படி பல்வேறு தொழில்களில் செய்துள்ள முதலீடு மற்றும் அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தினால் ஜூஹி சாவ்லா பணக்கார நடிகையாக வலம் வருகிறார்.
No comments