• Breaking News

    காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை

     


    சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை அடுத்த மடப்புரம் கோவிலில் காவலாளியாக வேலை பார்த்து வந்தவர், அஜித்குமார் (வயது 29). பேராசிரியை நிகிதா என்பவர் தனது நகை மாயமானதாக அளித்த புகாரின் பேரில் மானாமதுரை தனிப்படை போலீசார் அஜித்குமாரை கொடூரமாக தாக்கியதில் அவர் உயிரிழந்தார்.

    இந்த விவகாரம் தொடர்பாக தனிப்படை போலீஸ்காரர்கள் கண்ணன், பிரபு, ஆனந்த், ராஜா, சங்கரமணிகண்டன் ஆகியோர் கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இதற்கிடையே இந்த வழக்கானது, சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது. அதன்பேரில், மடப்புரம் கோவில் அலுவலகம், அஜித்குமார் தாக்கப்பட்டபோது வீடியோ எடுக்கப்பட்ட இடம், வணிக வளாகம் உள்ளிட்ட இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நேற்று கோவில் அதிகாரியின் டிரைவர் கார்த்திவேல், அஜித்குமாரின் சகோதரர் நவீன்குமார், ஆட்டோ டிரைவர் அருண்குமார், அஜித்குமாருடன் வேலை பார்த்து வந்த வினோத்குமார் மற்றும் பிரவீன் ஆகிய 5 பேரிடம் மதுரை ஆத்திகுளத்தில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் வைத்து சி.பி.ஐ. அதிகாரிகள் தனித்தனியாக விசாரணை நடத்தினர். சம்பவம் நடந்த தினத்தில் நடந்தது என்ன, போலீசார் எவ்வாறு நடந்து கொண்டார்கள், கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பி விசாரணை நடத்தினர்.

    இந்த நிலையில், அஜித்குமார் கொலை வழக்கில் சிபிஐ அதிகாரிகள் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். மடப்புரம் கோவிலுக்கு விளக்கு விற்பனை செய்யும் அழகுப் பெண் என்பவரின் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். மதுரை- ராமேஸ்வரம் சாலையில் உள்ள தனியார் பேக்கரி கடையில் உள்ள சிசிடிவியை சிபிஐ ஆய்வு செய்தனர். தற்போது அஜித்குமார் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வீட்டின் அருகே பதிவான சிசிடிவி காட்சிகளையும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

    No comments