பெரியார் நூலக கட்டடத்தில் ’கண் திருஷ்டி’ படம்..... அமைச்சர் எ.வ.வேலு விளக்கம்
கோவை காந்திபுரத்தில் 245 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பெரியார் நூலக கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. 6 ஏக்கர் பரப்பளவில் 245 கோடி மதிப்பில் 8 அடுக்கு கட்டடமாக பெரியார் நூலக கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. 2026 ஜனவரி மாதம் இந்த நூலகம் திறக்கப்படும் என கோவையில் முதலமைச்சர் இந்த திட்டத்தை அறிவிக்கும் போதே தெரிவித்திருந்தார். இதற்கான பணிகள் தற்போது துரிதப்படுத்தப்பட்டுள்ளது.இந்த நிலையில் இன்று நூலக கட்டுமான பணிகள் நடைபெறும் இடத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு ஆய்வு மேற்கொண்டார்.
இதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது 245 கோடி மதிப்பீட்டில் கட்டடம், 50 கோடி மதிப்பில் புத்தகங்கள் மற்றும் கணினிகள் கொண்டு வரப்படும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். நூலகம் தரமாகவும், விரைந்தும் கட்ட ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.கட்டுமான பணி ஆரம்பித்ததிலிருந்து அனைத்து பணிகளையும் ஆய்வு செய்து வருகிறோம். கட்டுமான பொருட்களின் தரம் குறித்து ஆய்வு மேற்கொள்ள அரசு பொறியாளர்கள் நிரந்தரமாக இங்கு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்” என்றார்.அப்போது பெரியார் நூலக கட்டுமான பணி நடைபெறும் இடத்தில் திருஷ்டி பலகை வைக்கப்பட்டு இருந்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, ”நான் ஒரு பெரியாரிஸ்ட் கட்டுமான பணிகள் முழுவதுமாக முடிந்து எங்களிடம் வரும்போது இது போன்ற திருஷ்டி படங்கள் எதுவும் இருக்காது. மேலும் நான் பகுத்தறிவாளன். இதுபோன்ற செயலை நான் ஏற்பது இல்லை. அரசு தரப்பில் இதெல்லாம் வைக்க வேண்டும் என்று நாங்கள் சொல்லவில்லை.
பெரியார் நூலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்றவாறு லிப்டுகளும் படிக்கட்டுகளும் வைக்கப்படுகிறது. அவர்கள் அதையும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார்.
No comments