திருவாரூரில் வீடு வீடாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம்
தமிழக முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக 2 நாள் பயணமாக திருவாரூருக்கு நேற்று சென்றார். பின்னர் அவர், காட்டூரில் உள்ள கலைஞர் கோட்டத்தில் சிறிதுநேரம் ஓய்வு எடுத்தார். மாலை 6 மணி அளவில் காட்டூரில் உள்ள தனது பாட்டி அஞ்சுகம் அம்மையாரின் நினைவிடத்திற்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதையடுத்து மாலை 6.20 மணி அளவில் 'ரோடு ஷோ'வை தொடங்கிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், துர்க்காலயா ரோடு, தெற்கு வீதி, பனகல் சாலை, பழைய பஸ் நிலையம், ரெயில்வே ரவுண்டானா வரை 6 கி.மீ. தூரம் ரோடு ஷோ மூலம் சாலையில் நடந்து சென்று மக்களை சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். வழிநெடுகிலும் முதல்-அமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் சன்னதி தெருவில் வீடு வீடாக சென்று பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அரசின் நலத்திட்டங்கள் முறையாக சென்று சேர்கிறதா? என பொதுமக்களிடம் அவர் கேட்டறிந்தார். மேலும் "ஓரணியில் தமிழ்நாடு" இயக்கத்தில் ஒன்றிணையுமாறு பொதுமக்களுக்கு முதல்-அமைச்சர் அழைப்பு விடுத்தார்.
No comments