டெஸ்ட் போட்டி..... குல்தீப் யாதவை பிளேயிங் லெவனில் சேர்க்காதது ஏன்.? இந்திய பயிற்சியாளர் விளக்கம்
இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்டு டிராப்போர்டில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த இந்தியா முதல் இன்னிங்சில் 358 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. பின்னர் தனது முதல் இன்னிங்சை அதிரடியாக தொடங்கிய இங்கிலாந்து 2-வது நாள் முடிவில் 46 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 225 ரன்கள் எடுத்திருந்தது. தொடக்க வீரர்கள் பென் டக்கெட் 94 ரன்னிலும், ஜாக் கிராவ்லி 84 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். துணை கேப்டன் ஆலி போப் (20 ரன்), முன்னாள் கேப்டன் ஜோ ரூட் (11 ரன்) களத்தில் இருந்தனர்.
இந்த நிலையில் 3-வது நாளான நேற்று தொடர்ந்து பேட் செய்த இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் முழுமையாக ஆதிக்கம் செலுத்தினர். அவர்களை இந்திய பவுலர்களால் கட்டுப்படுத்த இயலவில்லை. 'நம்பர் 1' பவுலர் ஜஸ்பிரித் பும்ராவின் பந்து வீச்சிலும் திணறடிக்கும் அளவுக்கு வேகம் இல்லை. இதனால் இங்கிலாந்து அணியினர் சிரமமின்றி ரன் சேகரித்தனர்.
3-வது நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 135 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 544 ரன்கள் சேர்த்து, 186 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. பென் ஸ்டோக்ஸ் 77 ரன்களுடனும், லியாம் டாசன் 21 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். ஆலி போப் 71 ரன்களிலும், ரூட் 150 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
இந்த சூழலில் 4-வது நாள் ஆட்டம் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியில் லியாம் டாசன் 26 ரன்களில் ஆட்டமிழந்தார். தற்போது பென் ஸ்டோக்ஸ் - பிரைடன் கார்ஸ் ஆடி வருகின்றனர். ஸ்டோக்ஸ் சதம் கடந்த நிலையில் பேட்டிங் செய்து வருகிறார்.
முன்னதாக இந்த போட்டியில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. பல முன்னாள் வீரர்களும் இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற வேண்டுமெனில் குல்தீப் யாதவை பிளேயிங் லெவனில் சேர்க்க வேண்டுமென கூறினர். ஆனால் அவரை சேர்க்காத இந்திய அணி அறிமுக வீரர் அன்ஷுல் கம்போஜை அணியில் சேர்த்துள்ளது.
இந்நிலையில் குல்தீப் யாதவை பிளேயிங் லெவனில் சேர்க்காதது ஏன்? என்பது குறித்து இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கல் விளக்கமளித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர் கூறுகையில், "குல்தீப் யாதவை வைத்து அணியில் எப்படி சமநிலையை காண முடியும், பேட்டிங் வரிசையை ஆழப்படுத்த முடியும் என்று பார்க்க வேண்டும். குல்தீப் உலகத் தரம் வாய்ந்தவர், தற்போது அவர் நன்றாக பந்து வீசுகிறார். எனவே அவர் களமிறங்குவதற்கான வழிகளைக் கண்டுபிடிக்க நாங்கள் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக பேட்டிங் துறையில் சமநிலையை உண்டாக்க முயற்சிப்பது அவருடைய வருகையை தள்ளி வைக்கிறது.
நாளின் இறுதியில் உங்களுக்கு ரன்கள் தேவை. குறிப்பாக இங்கிலாந்து போன்ற அதிரடியாக விளையாடும் அணிக்கு எதிராக 400 ரன்கள் அடிப்பதற்காக உங்களுக்கு கூடுதலாக பேட்ஸ்மேன்கள் தேவை. மான்செஸ்டர் பிட்ச் இதுவரை வறண்டுதான் இருக்கிறது. அதனால் பந்து கொஞ்சம் சுழல்கிறது. அது வாஷிங்டன் சுந்தர், ஜடேஜாவை ஆட்டத்திற்குள் கொண்டு வந்துள்ளது. குல்தீப்பை விளையாட வைக்க முயற்சிக்கிறோம். ஆனால் அதற்கு டாப் 6 பேட்ஸ்மேன்கள் தொடர்ச்சியாக பெரிய ரன்கள் குவிக்க வேண்டும். அப்படியானால் குல்தீப் போன்ற ஒருவரை நாங்கள் அணியில் சேர்க்க முடியும்" என்று கூறினார்.
No comments