தென்காசி: மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கிய மாவட்ட ஆட்சியர் கமல்கிஷோர்
தென்காசியில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 480 மனுக்கள் பெறப்பட்டது.
தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் பெற்றுக் கொண்டார். தொடர்ந்து தென்காசி கோட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையின் மூலம் நில எடுப்பு செய்யப்பட்டு வீடற்ற ஆதிதிராவிடர் இன 7 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனைப்பட்டாக்களையும், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத்திட்டத்தின் கீழ் மேலநீலிதநல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சி ஒன்றியப்பள்ளியில் சமையலராக பணிபுரிந்து பணியிடை காலமான சித்திரைவடிவு என்பவரின் வாரிசுதாரருக்கு குலசேகரமங்கலம் சத்துணவு மையத்தில் சத்துணவு அமைப்பாளராக கருணை அடிப்படையில் பணி நியமன ஆணையினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.
தொடர்ந்து, தமிழ்நாடு அரசு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில் பள்ளி புத்தாக்க மேம்பாட்டுத்திட்டத்தில் சிறந்த புத்தாக்க கண்டுபிடிப்பு போட்டியில் மாநில அளவில் முதலிடத்தை பிடித்த தென்காசி மாவட்டம் சுரண்டையில் உள்ள சேர்ந்தமரம் மேல்நிலைப்பள்ளியில் பதினோராம் வகுப்பு பயிலும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் 16.07.2025 அன்று சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு.தா.மோ. அன்பரசனிடம் இருந்து சிறந்த பள்ளிக்கான விருதினையும், சிறந்த வழிகாட்டி ஆசிரியருக்கான விருதினை சிவா, வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளான கே.மகாலெட்சுமி, ஏ.முகமது உமர், எஸ்.நஜிமா, எம்.ஹரிஷ்ராஜ், எம்.மாரி செல்வராஜன் ஆகியோர் ரூ.1 இலட்சத்திற்கான காசோலையினையும், நற்சான்றிதழ்களையும் பெற்றதை மாவட்ட ஆட்சித்தலைவரிடம் காண்பித்து வாழ்த்து பெற்றனர்.
மேலும், இக்கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரக்கோருதல், பட்டா மாறுதல், மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 480 மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட மனுக்கள் தகுதி வாய்ந்த மனுக்களாக உள்ளதா என்பதை விசாரணை செய்து விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரர்களுக்கு உரிய பதில் அளிக்குமாறு சம்பந்தப்பட்ட அனைத்து துறை அலுவலர்களுக்கும் மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர். ஜெயச்சந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் த ண்டபாணி, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) நம்பிராயர், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ரெஜினி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் எடிசன் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
No comments