ராமநாதபுரம், கடலூரில் தூய்மை பணியாளர்கள் போராட்டம் - MAKKAL NERAM

Breaking

Thursday, August 14, 2025

ராமநாதபுரம், கடலூரில் தூய்மை பணியாளர்கள் போராட்டம்

 


சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட ராயபுரம், திரு.வி.க. நகர் ஆகிய மண்டலங்களின் தூய்மைப்பணி தனியாருக்கு வழங்கப்பட்டது. இதை எதிர்த்து கடந்த 1-ந் தேதி 200-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகை முன்பு போராட்டத்தில் குதித்தனர்.


கோரிக்கை நிறைவேறும் வரை காத்திருப்பு போராட்டமாக நடத்தப்படும் என அறிவித்து நடைபாதையில் பந்தல் அமைத்து தங்களது போராட்டத்தை தொடங்கினார்கள். பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தியும், கோரிக்கையை நிறைவேற்றும் வரையில் போராட்டத்தை கைவிடப்போவதில்லை என திட்டவட்டமாக தெரிவித்தனர்.


இதற்கிடையே, தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதாக ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு தலைமை நீதிபதி, ‘சாலையை மறித்து போராட்டம் நடத்த அனுமதிக்க முடியாது. போராட்டத்தில் ஈடுபடும் தூய்மைப்பணியாளர்களை அப்புறப்படுத்த வேண்டும்' என உத்தரவிட்டார்.


இதையடுத்து, நள்ளிரவில் தூய்மை பணியாளர்களை போலீசார் அதிரடியாக குண்டுகட்டாக தூக்கி கைது செய்தனர். அப்போது போலீசாருடன் அவர்கள் வாக்குவாதம் செய்து தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கைது செய்யப்பட்ட தூய்மைப் பணியாளர்கள் அடையாறு, கிண்டி, சைதாபேட்டை, வேளச்சேரியில் உள்ள சமூக நல கூடங்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். மேலும் தூய்மை பணியாளர்கள் கைதுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.


இந்த நிலையில், சென்னையை தொடர்ந்து ராமநாதபுரம், கடலூரில் தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ராமநாதபுரத்தில் தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள தூய்மை பணியாளர்களை விடுவிக்க வலியுறுத்தியும், அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.


இதைபோல 3 மாதங்களாக ஊதியம் வழங்காததை கண்டித்து கடலூர் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆட்கள் பற்றாக்குறை காரணமாக பணிச்சுமை அதிகமாக உள்ளதாக தூய்மைப் பணியாளர்கள் குற்றம் சாட்டி உள்ளனர். மேலும் ஊதியம் வழங்கும் வரை போராட்டத்தை தொடர போவதாக தூய்மைப் பணியாளர்கள் அறிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment