முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம் - MAKKAL NERAM

Breaking

Thursday, August 14, 2025

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம்

 


தமிழகத்திற்கு, பல்வேறு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழக அரசு முனைப்பு காட்டி வருகிறது. அதன் ஒரு பகுதியாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு வெளிநாடுகளுக்கு சென்று வந்தார். இதனை தொடர்ந்து பல்வேறு தொழிற்சாலைகள், தமிழகத்தில் முதலீடுகளை மேற்கொள்ள முன்வந்தன.


அந்தவகையில் வின்பாஸ்ட் உள்பட பல்வேறு தொழில் நிறுவனங்களின் தொழிற்சாலை திட்டங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். மேலும் பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்-அமைச்சர் மீண்டும் வெளிநாடுகளுக்கு செல்ல திட்டமிட்டுள்ளார். அந்தவகையில் ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு வரும் செப்டம்பர் மாத தொடக்கத்தில் சுற்றுப்பயணம் செல்கிறார்.


இந்த நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது. சென்னை தலைமை செயலகத்தில் இன்று காலை 11 மணிக்கு நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்பட அனைத்து அமைச்சர்களும் பங்கேற்கின்றனர்.


இந்த அமைச்சரவை கூட்டத்தில், தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான முதல்-அமைச்சரின் வெளிநாட்டு பயணம், தமிழகத்தில் புதிய தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி, புதிய தொழில் திட்டங்களுக்கு, தொழில் விரிவாக்கத்திற்கு அனுமதி, ஆணவ படுகொலை தடுப்பதற்கான புதிய சட்டங்கள் உள்பட பல்வேறு திட்டங்கள் குறித்து அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

No comments:

Post a Comment