முதலமைச்சரை சந்தித்தது ஏன்.? பிரேமலதா விஜயகாந்த் விளக்கம்
காஞ்சிபுரத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உடல்நிலை சரியில்லை என்பதனால் ஒரு அரசியல் நாகரிகத்துடன், பண்பாடுடன் நட்பு ரீதியாக அவரை சந்தித்தோம்; பேசினோம். ஏனென்றால் கேப்டன் விஜயகாந்த் உடல்நிலை சரியில்லாதபோது ஒவ்வொரு முறையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் வந்து சந்தித்து பேசியுள்ளார். விஜயகாந்த் மறைவின்போது அரசு சார்பில் இறுதி மரியாதை அனைத்து செய்யப்பட்டன.
இன்றைக்கு நேற்று அல்ல; எங்கள் திருமணமே கலைஞர் தலைமையில் தான் நடந்தது. அந்த காலத்தில் இருந்தே நாங்களும், அவர்களும் குடும்ப நண்பர்கள் தான். கலைஞருக்கும், கேப்டனுக்கும் சுமார் 45 ஆண்டுகால பழக்கம். கலைஞர் மறைவின்போது அமெரிக்காவில் இருந்தபடி கேப்டன் விஜயகாந்த் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். இதுவே மரியாதை; நட்பு..
அந்த வகையில்தான் நாங்களும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினோம். அது அவருக்கு (மு.க.ஸ்டாலின்) மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. எங்கள் சந்திப்பு குறித்து உடனே எக்ஸ் தளத்தில் மகிழ்ச்சி தெரிவித்து முதல்-அமைச்சர் பதிவிட்டார். நாங்களும் அதற்கு நன்றி தெரிவித்து மறுபதிவு வெளியிட்டோம்.
வெவ்வேறு கட்சியினர் சந்தித்தாலே கூட்டணி தானா?. எல்லோரும் மனிதர்கள் தான். அரசியலுக்கு அப்பாற்பட்டு ஒரு நாகரீகம் கருதியே அந்த சந்திப்பு. தேமுதிகவை பலப்படுத்தி வருகிறோம். ஆகையால் இப்போதைக்கு கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை. இன்னும் 7-8 மாதங்கள் இருக்கிறது. எனவே அதுவரை மக்கள் சந்திப்பும், தொண்டர்கள் சந்திப்பும் தான் நடக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
No comments