ஆற்றில் கிடந்த 'உங்களுடன் ஸ்டாலின்’ மனுக்கள்..... சிவகங்கை மாவட்ட ஆட்சியர் விளக்கம்......
தமிழ்நாட்டில் அனைத்து நகர்ப்புற மற்றும் ஊரகப் பகுதிகளில் முகாம்கள் நடத்தி மக்களிடம் மனுக்களை பெறும் வகையில் 'உங்களுடன் ஸ்டாலின்' என்ற புதிய திட்டத்தை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஜூலை 15-ந்தேதி தொடங்கி வைத்தார்.
'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்களில் மக்கள் வழங்கும் மனுக்கள் மீது அதிகபட்சம் 45 நாட்களில் தீர்வு காணப்படும் என அரசு அறிவித்திருக்கும் நிலையில், இதுவரை நடந்த முகாம்கள் மூலம், லட்சக்கணக்கான மனுக்கள் பெறப்பட்டிருப்பதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வைகை ஆற்றில் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில் பெறப்பட்ட மனுக்கள் மிதப்பதைக் கண்டு பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். ஆற்று நீரில் மிதந்து வந்த மனுக்களை சேகரித்த போலீசார், இதுதொடர்பாக விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சிவகங்கை அருகே கீழடி, கொந்தகை, நெல் முடிகரை, மடப்புரம் பகுதிகளில் நடந்த 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்களில் பெறப்பட்ட மனுக்கள் ஆற்றில் மிதந்து வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக அ.தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் சமூக வலைதளங்களில் தி.மு.க. அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இந்த நிலையில், திருப்புவனம் வைகை ஆற்றுப் பாலத்தின் கீழ் ஆற்றில் ‘உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் தொடர்பான மனுக்கள் கிடந்ததாக வெளியான செய்திக்கு சிவகங்கை மாவட்ட கலெக்டர் பொற்கொடி விளக்கமளித்துள்ளார். அதன்படி, ‘உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் மூலம் தீர்வு காணப்பட்ட 6 மனுக்களின் நகல்கள் மற்றும் வட்டாட்சியர் அலுவலகம் மூலம் பெறப்பட்ட 7 மனுக்களின் நகல்கள் ஆகியவை கிடைக்கப்பெற்றதாக அவர் தெரிவித்தார்.
இதில் பட்டா மாறுதல் கோரி அளிக்கப்பட்ட மனுக்கள் மீது உடனே நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு விட்டது என்று தெரிவித்த அவர், ஆற்றில் மனுக்கள் கிடந்ததாக வெளியான தகவலின் அடிப்படையில் விசாரணை நடக்கிறது என்றும், அரசுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் சமூக விரோத செயலில் ஈடுபட்டோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
No comments