ஜப்பான் முன்னாள் பிரதமர்களுடன் இந்திய பிரதமர் மோடி சந்திப்பு
பிரதமர் நரேந்திர மோடி 2 நாட்கள் சுற்றுப்பயணமாக ஜப்பான் சென்றுள்ளார். ஜப்பான் தலைநகர் டோக்கியோ சென்றடைந்த பிரதமர் மோடிக்கு, அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் மற்றும் உயர் அதிகாரிகள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து டோக்கியோவில் நடந்த இந்தியா-ஜப்பான் பொருளாதார மன்றத்தில் பங்கேற்று உரையாற்றிய பிரதமர் மோடி, இந்தியாவும், ஜப்பானும் இணைந்து இந்த நூற்றாண்டை நிலைத்தன்மை, வளர்ச்சி மற்றும் செழிப்பானதாக உருவாக்கும் என்று தெரிவித்தார்.
இதையடுத்து ஜப்பான் முன்னாள் பிரதமர்கள் யோஷிஹிடே சுகா மற்றும் புமியோ கிஷிடா ஆகியோரை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். இது தொடர்பாக பிரதமர் மோடி ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “புமியோ கிஷிடாவுடன் அற்புதமான சந்திப்பு நிகழ்ந்தது. அவர் எப்போதும் இந்தியா-ஜப்பான் இடையிலான நெருக்கமான உறவுகளை தீவிரமாக ஆதரித்து வருபவர்.
வர்த்தகம், முக்கியமான தொழில்நுட்பங்கள் மற்றும் மனிதவளம் ஆகிய துறைகளில் நமது இருதரப்பு கூட்டாண்மையின் முன்னேற்றம் குறித்து நாங்கள் விவாதித்தோம். தொழில்நுட்பம் மற்றும் செமிகண்டக்டர் உள்ளிட்ட துறைகளின் வளர்ச்சிக்கான விரிவான வாய்ப்புகள் குறித்தும் நாங்கள் விவாதித்தோம்” என்று பதிவிட்டுள்ளார்.
அதே போல் இந்தியா-ஜப்பான் சங்கத்தின் தலைவரும், முன்னாள் ஜப்பான் பிரதமருமான யோஷிஹிடே உடனான சந்திப்பு குறித்து பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில், “இந்தியா-ஜப்பான் ஒத்துழைப்பின் பல பரிமாணங்கள் பற்றிப் பேசினோம். தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, வர்த்தகம், முதலீடு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நெருக்கமான ஒத்துழைப்பை எவ்வாறு உருவாக்குவது என்பது குறித்து நாங்கள் விவாதித்தோம்” என்று தெரிவித்துள்ளார்.
No comments