பிரதமர் மோடியை சந்தித்த பாஜக துணை ஜனாதிபதி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் - MAKKAL NERAM

Breaking

Monday, August 18, 2025

பிரதமர் மோடியை சந்தித்த பாஜக துணை ஜனாதிபதி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன்

 


துணை ஜனாதிபதியாக இருந்தவர், ஜெகதீப் தன்கர். நாட்டின் 16-வது துணை ஜனாதிபதியாக கடந்த 2022-ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், கடந்த மாதம் 21-ந் தேதி திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார்.


உடல் நிலையை கருத்தில் கொண்டு பதவி விலகுவதாக ஜனாதிபதிக்கு அவர் கடிதம் அனுப்பினார். அவரது ராஜினாமாவை ஜனாதிபதி திரவுபதி முர்முவும் ஏற்றுக்கொண்டார். இன்னும் 2 ஆண்டுகள் பதவிக்காலம் இருந்த நிலையில் திடீரென ஜெகதீப் தன்கர் பதவி விலகியது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.


தன்கர் ராஜினாமா செய்ததை தொடர்ந்து, புதிய துணை ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான ஆயத்தப்பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கியது. அதன்படி,  துணை ஜனாதிபதி தேர்தல் வரும் 9-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. நாடாளுமன்றத்தில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும், அதைத்தொடர்ந்து உடனே வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவு இன்றைய தினமே அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதனிடையே, துணை ஜனாதிபதி தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் வேட்பாளராக தமிழகத்தை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார். பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடைபெற்ற பாஜக ஆட்சிமன்றக்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. சி.பி.ராதாகிருஷ்ணன் தற்போது மராட்டிய கவர்னராக செயல்பட்டு வருகிறார். சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, பாஜக மற்றும் கூட்டணி கட்சியினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


இந்நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மராட்டிய மாநில கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் பிரதமர் மோடியை இன்று டெல்லியில் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.

No comments:

Post a Comment