முத்துமாலைபுரம் மாலை நேர படிப்பக மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடி சின்னத்திரை நடிகர்கள் பரிசு வழங்கி பாராட்டினர் - MAKKAL NERAM

Breaking

Tuesday, August 5, 2025

முத்துமாலைபுரம் மாலை நேர படிப்பக மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடி சின்னத்திரை நடிகர்கள் பரிசு வழங்கி பாராட்டினர்


முத்துமாலைபுரத்தில் அமைந்துள்ள ஆதிநாராயணன்-சந்திரலீலா நினைவு கட்டணமில்லா மாலை நேர படிப்பக மாணவ, மாணவிகளுடன்  திரைப்பட நடிகரும், இயக்குனருமான பாரதிகண்ணன், சின்னத்திரை இயக்குனர், நடிகர், தயாரிப்பாளருமான திருச்செல்வம் ஆகியோர் கலந்துரையாடி பரிசுகள் வழங்கினர்.

தென்காசி-கடையம் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீதோரணமலை முருகன் கோவில் பரம்பரை அறங்காவலரான மறைந்த கே.ஆதிநாராயணனின் சொந்த ஊரான முத்துமாலைபுரத்தில் அவர் வசித்த குடும்ப வீடானது கிராமப்புற மாணவ, மாணவிகள் படிப்பதற்காக ஆதிநாராயணன்-சந்திரலீலா நினைவு கட்டணமில்லா மாலை நேர படிப்பகமாக செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 105 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இதே போல் அங்கு ஆதிநாராயணன்-சந்திரலீலா நினைவு விளையாட்டு மைதானமும் அமைந்துள்ளது.

இந்நிலையில் தோரணமலை முருகன் கோவிலில் ஆடிப்பெருக்கினை முன்னிட்டு சுமங்கலி பெண்களுக்கு சுவாசினி பூஜைகள் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடத்தப்பட்டது. இதில் திரைப்பட நடிகரும், இயக்குனருமான பாரதிகண்ணன், சின்னத்திரை இயக்குனர், நடிகர், தயாரிப்பாளருமான திருச்செல்வம் ஆகியோர் பங்கேற்று தரிசனம் செய்தனர். அதைத்தொடர்ந்து அங்கு நடைபெற்ற முத்துமாலைபுரம் ஆதிநாராயணன் -சந்திரலீலா நினைவு மாலைநேர படிப்பக மாணவ, மாணவிகள் கலைநிகழ்ச்சியை நேரில் கண்டு களித்தனர். மாணவர்களை  பாராட்டிய அவர்கள் மாலை நேர படிப்பகம் குறித்து அறிந்து, நேரடியாக முத்துமாலைபுரத்திற்கு கிராமத்திற்கு வருகை தந்தனர். அங்கு படித்து கொண்டிருந்த மாணவ. மாணவிகளை நேரில் சந்தித்து கலந்துரையாடினர். அவர்கள் அனைவருக்கும் பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டியதுடன், கல்வி ஒன்றே யாராலும் திருட முடியாத சொத்து. கல்வியை சரியான முறையில் கற்றால் கல்வியானது உங்களது வாழ்க்கையை முழுமையாகவும், செம்மையாகவும் மாற்றும். அனைவரும் நன்றாக கல்வி கற்க வேண்டும் என அறிவுரை வழங்கினர்.  மேலும் படித்துவிட்டு கலைத்துறைக்கு வர விரும்பும் மாணவ, மாணவியருக்கு தேவையான உதவிகளையும், வழிகாட்டுதலையும் செய்வதாக கூறினர். தொடர்ந்து அங்கு ஆதிநாராயணன்-சந்திரலீலா நினைவு விளையாட்டு மைதானத்தையும் பார்வையிட்டனர்.

பின்னர் தங்களது  குடும்ப வீட்டை கிராமப்புற மாணவ, மாணவிகள் கல்வி கற்கும் வகையில் இலவச மாலை நேர படிப்பகமாக மாற்றியதுடன்,மாணவர்களுக்கு தேவையான நோட், புத்தகம், பைகள் மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கிய தோரணமலை பரம்பரை அறங்காவலர் செண்பகராமன் மற்றும் குடும்பத்தினருக்கு அவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

No comments:

Post a Comment