• Breaking News

    சீன அதிபரை சந்திக்கிறார் பிரதமர் மோடி..... அமெரிக்காவுக்கு எதிராக வியூகம்.?

     


    ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு என்பது சீனா, ரஷியா, இந்திய உள்ளிட்ட 10 உறுப்பு நாடுகளை கொண்ட அரசியல், பொருளாதாரம் மற்றும் சர்வதேச பாதுகாப்பு அமைப்பாகும்.


    இந்த அமைப்பு கடந்த 2001-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பில் கடந்த 2017-ம் ஆண்டு இந்தியாவும், பாகிஸ்தானும் இணைந்தது. இந்த அமைப்பின் ஒத்துழைப்பு அமைப்பின் வருடாந்திர உச்சி மாநாடு ஆகஸ்டு 31 மற்றும் செப்டம்பர் 1-ந்தேதிகளில் நடைபெறும்.


    இந்த ஆண்டுக்கான மாநாடு இன்று (ஞாயிற்றுக்கிழமை) சீனாவில் உள்ள தியான்ஜின் நகரில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க வருமாறு பிரதமருக்கு சீனா அழைப்பு விடுத்து இருந்தது. இதற்காக இந்தியா வந்த சீன வெளியுறவு மந்திரி வாங் யி, பிரதமரை சந்தித்து நேரில் அழைப்பு விடுத்தார். பிரதமரும் அந்த அழைப்பை ஏற்றுக்கொண்டார்.


    சீனா பயணத்துக்கு முன்பாக பிரதமர் நரேந்திர மோடி 2 நாட்கள் சுற்றுப்பயணமாக ஜப்பான் சென்றார். அங்கு டோக்கியோவில் நடந்த இந்தியா-ஜப்பான் பொருளாதார மன்றத்தில் பங்கேற்று உரையாற்றிய பிரதமர் மோடி, இந்தியாவும், ஜப்பானும் இணைந்து இந்த நூற்றாண்டை நிலைத்தன்மை, வளர்ச்சி மற்றும் செழிப்பானதாக உருவாக்கும் என்று தெரிவித்தார்.


    ஜப்பானில் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்ட பிரதமர் மோடி, தனி விமானம் மூலம் அங்கிருந்து சீனா புறப்பட்டார். சீனாவில் உள்ள தியான்ஜின் விமான நிலையத்துக்கு வந்து இறங்கிய பிரதமர் மோடிக்கு, சிவப்பு கம்பள வரவேற்பு கொடுக்கப்பட்டது.


    தியான்ஜின் நகரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். இதில் சீன அதிபர் ஜின்பிங், ரஷிய அதிபர் புதின் மற்றும் கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், பாகிஸ்தான், ஈரான், பெலாரஸ் ஆகிய நாடுகளின் தலைவர்களும் பங்கேற்கிறார்கள்.


    இந்த மாநாட்டுக்கு இடையே ஜின்பிங்கையும், ரஷிய அதிபர் புதினையும் பிரதமர் மோடி சந்தித்து பேசுவார். அப்போது இந்திய-சீனா-ரஷியா இடையேயான ஒத்துழைப்பு குறித்தும், உறவு குறித்தும் விரிவாக விவாதிக்கப்படும்.


    முன்னதாக கடந்த 2018-ம் ஆண்டு சீனாவில் நடந்த மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். இதையடுத்து 2019-ம் ஆண்டு சீன அதிபர் ஜின்பிங் இந்தியா வந்தார். அதன் பிறகு பிரதமர் மோடி சீனா செல்லவில்லை. இதனிடையே 2020-ம் ஆண்டு கல்வான் பகுதியில் சீனா-இந்தியா இடையே நடந்த தாக்குதலுக்கு பிறகு இருநாடுகளுக்கு இடையேயான உறவில் சற்று விரிசல் ஏற்பட்டது.


    இந்த சூழ்நிலையில் 7 ஆண்டுகளுக்கு பிறகு பிரதமர் மோடி, சீனாவுக்கு சென்றுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு எதிராக பரஸ்பர வரி விதித்துள்ள நிலையில் ரஷிய, சீன, இந்திய தலைவர்கள் ஒரே இடத்தில் கூடி பேசுவதன் மூலம் அமெரிக்காவுக்கு எதிரான புதிய வியூகம் ஒன்றை வகுக்க வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது.

    No comments