தேர்தல் ஆணையம் யாருக்கும் அஞ்சப்போவதில்லை..... தேர்தல் ஆணையர் விளக்கம் - MAKKAL NERAM

Breaking

Sunday, August 17, 2025

தேர்தல் ஆணையம் யாருக்கும் அஞ்சப்போவதில்லை..... தேர்தல் ஆணையர் விளக்கம்

 


கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வாக்குத் திருட்டில் ஈடுபட்டதாகவும், இதற்குத் தேர்தல் ஆணையமும் உடந்தையாக இருந்ததாகவும் காங்கிரஸ் குற்றச்சாட்டை எழுப்பியுள்ளது. பீகார் சிறப்புத் தீவிர வாக்காளர் திருத்தப் பணியிலும் முறைகேடுகள் நடைபெறுவதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. ராகுல் காந்தி இந்தப் பிரச்சினையைத் தீவிரமாக எழுப்பியுள்ளார்.இந்நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் இவ்விவகாரம் தொடர்பாகப் பேசியதாவது:


"வாக்காளர் பட்டியல் சீராய்வு தேவை என அரசியல் கட்சிகள் கோரிக்கை வைத்தன. தேர்தல் ஆணையம் பாரபட்சமின்றி செயல்படுகிறது. எல்லாக் கட்சிகளையும் தேர்தல் ஆணையம் சரிசமமாக நடத்துகிறது. ஒவ்வொரு அரசியல் கட்சியும் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்வதன் மூலம் உருவாகின்றன. பிறகு, எப்படி அரசியல் கட்சிகளிடையே தேர்தல் ஆணையம் பாகுபாடு காட்ட முடியும்?


பீகார் வாக்காளர் பட்டியல் விவகாரத்தில் பொய்கள் பரப்பப்படுகின்றன. வாக்குத் திருட்டு குற்றச்சாட்டுகள் அரசமைப்பை அவமதிக்கின்றன. அனைத்து மாவட்ட அளவிலும் அனைவரும் இணைந்து செயல்படுகிறோம். வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் வெளிப்படையான முறையில் பணியாற்றுகின்றனர்.சிலர் இரட்டை வாக்களிப்பு நடந்ததாகக் கூறினர். ஆதாரம் கேட்டபோது எந்தப் பதிலும் இல்லை.


சிறப்புத் தீவிர வாக்காளர் திருத்தம் இதுவரை 12 முறை நடைபெற்றுள்ளது. இது ஒன்றும் புதிதல்ல. யார் எந்த அரசியல் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும், அரசமைப்புக் கடமையிலிருந்து தேர்தல் ஆணையம் பின்வாங்காது. அனைத்துத் தரப்பு வாக்காளர்களுக்கும் எவ்விதப் பாகுபாடுமின்றி தேர்தல் ஆணையம் துணை நிற்கும். நாடாளுமன்றத் தேர்தலின்போது ஒரு கோடிக்கும் மேற்பட்டவர்கள் தேர்தல் பணிகளில் ஈடுபட்டனர்.


இவ்வளவு மக்கள் முன்னிலையில் எப்படி வாக்காளர்களின் வாக்குகளைத் திருட முடியும்? தேர்தல் ஆணையம் யாருக்கும் அஞ்சப்போவதில்லை. தேர்தல் ஆணையத்திற்கு எதிர்க்கட்சி, ஆளும் கட்சி என்ற வேறுபாடு எதுவும் கிடையாது. அனைவரும் சமம். சில கட்சிகள் குழப்பத்தை உருவாக்கி வருகின்றன."இவ்வாறு அவர் பேசினார்.

No comments:

Post a Comment