தமிழகத்தில் பீகாரிகள் தாக்கப்பட்ட போது ஸ்டாலின் எங்கே போனார்....? பிரசாந்த் கிஷோர் கேள்வி......
பீகார் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி பீகாரில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தத்தை தேர்தல் கமிஷன் நடத்தியது. இதன் மூலம் இடம்பெயர்ந்தவர்கள், மரணம் அடைந்தவர்கள் என 65 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இதை கண்டித்தும், பா.ஜனதாவுக்கு ஆதரவாக தேர்தல் கமிஷன் செயல்படுவதாக கூறியும் நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, வாக்காளர் அதிகார யாத்திரையை பீகாரில் கடந்த 17-ந் தேதி தொடங்கினார். திறந்த வாகனம், மோட்டார் சைக்கிளில் பேரணியாக அவர் செல்கிறார். அவருடன் ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவரும், பீகார் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான தேஜஸ்வி யாதவும் பங்கேற்கிறார்.
இந்த நிலையில் பீகார் மாநிலம் முசாபர்பூரில் நேற்று நடந்த பேரணியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டார். அவருடன் கனிமொழி எம்.பி.யும் பங்கேற்றார். திறந்த வெளி ஜீப்பில், ராகுல் காந்தி, தேஜஸ்வி யாதவுடன், முதல்வர் மு.க. ஸ்டாலினும் பயணித்தார். இதில் பிரியங்காவும் கலந்து கொண்டார். பின்னர் அங்கு நடந்த பொதுக்கூட்டத்திலும் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்.
முதல்வர் மு.க. ஸ்டாலினின் பீகார் பயணத்தை, தேர்தல் வியூக நிபுணரும் ஜனசுராஜ் கட்சியின் நிறுவனருமான பிரசாந்த் கிஷோர் விமர்சித்துள்ளார். பிரசாந்த் கிஷோர் கூறுகையில், "தமிழ்நாட்டில் பீகாரிகள் தாக்கப்பட்ட போது ஸ்டாலின் எங்கே போனார்? தமிழ்நாட்டில் பீகாரிகள் தாக்கப்படுகிறார்கள், இழிவுபடுத்தப்படுகிறார்கள். அப்போது ஸ்டாலின் எதுவும் செய்யவில்லை; ‘கூலி வேலை செய்வது பீகாரிகள் மரபணுவில் உள்ளது’ என்று ரேவந்த் ரெட்டி பேசினார். அவரை காங்கிரஸ் கவுரவிக்கிறது. பீகாரிகளை அவமதிப்பவர்களை காங்கிரஸ் முன்னிறுத்துகிறது” என்று விமர்சித்துள்ளார்.
No comments