கடலூர் மாவட்டம் சிறுபாக்கம் அருகே உள்ள ஜா.ஏந்தல் கிராமத்தில் வசிக்கும் மக்கள் மகாத்மாகாந்தி ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் வேலை செய்து தங்களது குடும்பத்தை காப்பாற்றி வருகிறார்கள்.
இந்த நிலையில் ஊராட்சி செயலாளர் வேல்முருகன் என்பவர் வீட்டு வரி, குடிநீர் வரி செலுத்திய ரசீதை காண்பிக்கும் நபர்களுக்கு மட்டுமே மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டப்பணிகள் வழங்கியதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் நேற்று அங்குள்ள ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள், அங்கு பணியில் இருந்த ஊராட்சி செயலாளர் வேல்முருகனிடம் அனைவருக்கும் வேலை வழங்கக்கோரி வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், அவரை அலுவலகத்துக்குள் வைத்து பூட்டினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்ததும் மங்களூர் ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மாணிக்கரசி மற்றும் சிறுபாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, ஊராட்சி அலுவலகத்தை திறந்து ஊராட்சி செயலாளரை விடுவித்தனர். அப்போது ஒருசிலர், ஊராட்சி செயலாளர் வேல்முருகனை தாக்க முயன்றதாக தெரிகிறது. இதையடுத்து போலீசார், ஊராட்சி செயலாளரை மீட்டதுடன், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்து, கலைந்து போக செய்தனர்.
No comments:
Post a Comment