2 இளம்பெண்களுடன் போதை வாலிபர்கள் அட்டகாசம்...... கடல் அலையில் சிக்கிய சொகுசு கார்.....
கடலூரில் நள்ளிரவு 12 மணிக்கு சாகச பயணம் விபரீதத்தில் முடிந்தது. 2 இளம்பெண்களுடன் சொகுசு காரில் போதை வாலிபர்கள் கடலில் சிக்கி தவித்தனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.
சென்னையில் இருந்து 2 இளம்பெண்களுடன் 5 வாலிபர்கள் சொகுசு காரில் சுற்றுலா புறப்பட்டனர். புதுச்சேரியை சுற்றிப்பார்த்த அவர்கள், கடந்த 2 நாட்களுக்கு முன்பு நள்ளிரவில் கடலூருக்கு வந்தனர். அப்போது 5 வாலிபர்களும் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அந்த சொகுசு கார் 4 வீல் டிரைவ் வசதி கொண்டது.
4 வீல் டிரைவ் வசதி என்பது வாகனத்தின் என்ஜின் சக்தியை ஒரே நேரத்தில் நான்கு சக்கரங்களுக்கும் வினியோகித்து, கடினமான சாலைகள், சேறு, மணல், மற்றும் சறுக்கும் பரப்புகளில் சிறந்த இழுவை மற்றும் கட்டுப்பாட்டை வழங்கும் ஒரு மேம்பட்ட இயக்கி முறையாகும். இது முக்கியமாக ஆப்-ரோடு மற்றும் கடினமான நிலப்பரப்புகளில் பயன்படுத்தப்படுகிறது. மேலும் இது வாகனத்தின் சக்கரங்களை அதிக வேகத்தில் சுழல விடாமல், மிகவும் சவாலான நிலப்பரப்பில் செல்வதற்கு உதவுகிறது.
இத்தகைய வசதி கொண்ட சொகுசு காருடன் கடற்கரையில் சாகச பயணம் மேற்கொள்ளலாம் என்ற விபரீத ஆசை போதை வாலிபர்களுக்கு ஏற்பட்டது. இதையடுத்து 2 இளம்பெண்களை காரில் ஏற்றிக்கொண்ட வாலிபர்கள், நள்ளிரவு 12 மணிக்கு கடலூர் துறைமுகம் அருகே சொத்திக்குப்பம் மீனவ கிராமத்திற்கு சென்றனர். அங்குள்ள கடற்கரை மணலில் அலைகளுக்கு மத்தியில் காரில் சென்று மகிழ்ந்தனர்.
அப்போது, கடலில் எழுந்த ராட்சத அலையில் கார் சிக்கிக்கொண்டது. கடற்கரையில் இருந்து சிறிது தூரம் வரை கடலில் சென்று நின்றது. இதனால் செய்வதறியாமல் தவித்த 7 பேரும் காரில் இருந்து இறங்கி, கடற்கரை நோக்கி ஓடிவந்தனர். அதில் ஒரு வாலிபர் மட்டும் தில்லாக மீண்டும் ஏறி, காரை இயக்கி பார்த்தார். ஆனால் அந்த காரை இயக்க முடியவில்லை. மீட்கவும் முடியவில்லை.
இதையடுத்து 7 பேரும் காரை அங்கேயே விட்டுவிட்டு கடலூர் மாநகருக்கு வந்துவிட்டனர். இதையடுத்து மீண்டும் நேற்று முன்தினம் வந்த அவர்கள், சொத்திக்குப்பம் மீனவர்கள் உதவியுடன் காரை டிராக்டரில் கட்டி கடலில் இருந்து கரைக்கு இழுத்து கொண்டு வந்தனர்.
ஆனால் காருக்குள் உப்பு தண்ணீர் புகுந்திருந்ததால் காரை இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் கார் சொத்திக்குப்பம் கடற்கரை அருகிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதுபற்றி அறிந்த கடலூர் துறைமுகம் போலீசார் விரைந்து சென்று, 7 பேரிடமும் விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையே கடலில் கார் சிக்கிக் கொண்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
No comments