• Breaking News

    அம்மாபட்டினத்தில் 4வது முறையாக அறுந்து விழுந்த மின்கம்பி..... தொடரும் மின்வாரியத்தின் அலட்சியம்....


    புதுக்கோட்டை மாவட்டம் அம்மாபட்டினம் வடக்கு தெருவில் 4வது முறையாக மின்கம்பி அறுந்து விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக பொதுமக்கள் உயிர் தப்பியுள்ளனர்.

    புதுக்கோட்டை மாவட்டம் அம்மாபட்டினம் வடக்குதெரு பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியளவில் மின்கம்பி அறுந்து விழுந்தது. இதை உடனடியாக பார்த்த பொதுமக்கள் மின்வாரியத்திற்கு தகவல் தெரிவித்து மின்நிறுத்தம் செய்யப்பட்டது. சரியான நேரத்தில் பொதுமக்கள் பார்த்ததால் உயிர்பலி தவிர்க்கப்பட்டது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கடைத்தெருவில் மின் கம்பி அறுந்து விழுந்து பிஸ்மிகான் (20) என்ற இளைஞர் பலியானார். கடந்த மாதம் அங்கன்வாடி அருகே ஒரு மின்கம்பி அறுந்து விழுந்தது. கடந்த வாரம் ஆண்கள் நடுநிலைப்பள்ளி நுழைவாயிலில் மின்கம்பி அறுந்து விழுந்ததால் பள்ளிக்கு வந்த மாணவர்கள் உயிர் தப்பினர். 

    ஒவ்வொரு முறையும் மின்வாரியத்திடம் முறையிட்டும் இதுவரை பழைய மின்கம்பியோ, பழைய மின்கம்பங்களோ மாற்றப்படவில்லை. அம்மாபட்டினத்தில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக பழைய மின்கம்பிகள் மாற்றப்படாமல் உள்ளன. இதனால் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் வெளியில் செல்ல மிகுந்த அச்சப்படுகின்றனர். அம்மாபட்டினம் ஊராட்சியில் பல இடங்களில் மின்கம்பிகள் மற்றும் மின்கம்பங்கள் ஆபத்தான முறையில் உள்ளன. எனவே இந்த முறையும் அலட்சியம் செய்யாமல் மின்வாரியம் உடனடி நடவடிக்கை எடுத்து பழைய மின்கம்பிகளையும், பழைய மின்கம்பங்களையும் மாற்ற வேண்டும் என பொதுமக்கள் மீண்டும் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.

    No comments