தென்காசியில் கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியர் கலந்துரையாடல்..... கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது
தென்காசியில் கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியர் கமல்கிஷோர் கலந்துரையாடல் நடத்தி, கல்வி உபகரணங்களை வழங்கினர்.
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் கீழ், மாவட்ட குழந்தைப் பாதுகாப்பு அலகின் மூலம் கொரோனாவால் பெற்றோரை இழந்த, பெற்றோரில் ஒருவரை இழந்த குழந்தைகள் மற்றும் நிதி ஆதரவு திட்டத்தின் கீழ் பயனடைந்து வரும் குழந்தைகளுடன் கலந்துரையாடுதல் மற்றும் சுகாதாரத்துறை மூலம் மருத்துவ முகாம், குழந்தைகளின் கல்வி நிலையினை உறுதிப்படுத்துதல் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் தலைமை வகித்தார்.
இந்நிகழ்ச்சியில் குழந்தைகளுக்கு பேனா, நோட்டு, புத்தகங்கள் முதலிய உபகரணங்களை வழங்கியதுடன் குழந்தைகளுடன் அவர்களின் கல்வி, உடல்நலம் ஆகியவை குறித்து மாவட்ட ஆட்சியர் கலந்துரையாடினார். கொரோனாவால் பெற்றோரை இழந்த, பெற்றோரில் ஒருவரை இழந்த குழந்தைகள் மற்றும் நிதி ஆதரவு திட்டத்தின் கீழ் பயனடைந்து வரும் குழந்தைகள் மற்றும் குழந்தைகளின் பெற்றோர்,பாதுகாவலர்கள் ஆகியோர்கள் சேர்த்து மொத்தம் 400 நபர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட குழந்தைகள் மற்றும் பெற்றோர்களுக்கு குழந்தைகள் பாதுகாப்பு மைய எண்.1098, குழந்தை தொழிலாளர் தடுப்பு சட்டம், இளைஞர் நீதிச்சட்டம் 2015, போக்சோ சட்டம் 2012 ஆகியவைகள் குறித்து விழிப்புணர்வு அளிக்கப்பட்டு, விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டது. குழந்தைகள் ராஜேஸ்வரி, செல்வன்.கௌசித் ஆகியோர் தாங்கள் அடைந்த பயன் குறித்து கூறி நன்றி தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட குழந்தைப் பாதுகாப்பு அலுவலர் அலெக்ஸ், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரெஜினா, இளைஞர் நீதிக்குழும உறுப்பினர் வேல்ராஜன் மற்றும் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகின் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
No comments