சபரிமலை ஐயப்பன் கோவிலில் தங்க முலாம் பூசிய தகடுகள் அகற்றம்..... கேரள ஐகோர்ட் கண்டனம்......
![]() |
File Image |
சபரிமலை அய்யப்பன் கோவில் சன்னதி முன்பு உள்ள 2 துவார பாலகர் சிலைகள் மீது தங்க முலாம் பூசிய தகடுகள் பொருத்தப்பட்டு உள்ளது. சமீபத்தில் அந்த சிலைகள் மீதிருந்த தங்க முலாம் பூசிய தகடுகளை பழுது நீக்கம் செய்வதற்காக தேவசம்போர்டு சிறப்பு ஆணையாளரிடம் அனுமதி பெறாமல் தேவசம்போர்டு நிர்வாகிகள் கழற்றி எடுத்து கொண்டு சென்று உள்ளனர். இதன் மூலம் ஐகோர்ட்டு உத்தரவை மீறியதாக கேரள ஐகோர்ட்டில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை நீதிபதிகள் அஜித்குமார், ஜெய்சங்கரன் நம்பியார் ஆகியோர் விசாரித்தனர். அப்போது அவர்கள், சபரிமலையில் விலை மதிப்புள்ள பொருட்களை சன்னதியில் வைத்து பழுது நீக்குவதற்கு எந்த தடையும் இல்லை. அதற்கு யாருடைய அனுமதியும் பெற வேண்டியது இல்லை என்று தெரிவித்தனர். ஆனால், அவற்றை கழற்றி எடுத்து வெளியே கொண்டு போய் பழுது நீக்கி சரிசெய்து கொண்டு வர வேண்டுமானால், தேவசம்போர்டு சிறப்பு ஆணையாளரிடம் முன் அனுமதி பெற வேண்டும் என ஏற்கனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
ஐகோர்ட்டு உத்தரவை கடைபிடிக்காமலும், சிறப்பு ஆணையாளரிடம் அனுமதி பெறாமலும் சபரிமலை சன்னிதானத்தில் உள்ள 2 துவார பாலகர் சிலைகள் மீது போடப்பட்டிருந்த தங்க முலாம் பூசிய தகடுகள் கழற்றி எடுத்து சென்னைக்கு அனுப்பப்பட்டு உள்ளது. இது ஏற்புடையது அல்ல. உரிய வழிமுறைகளை பின்பற்றாத தேவசம்போர்டு நடவடிக்கை சரியாக இல்லை என்று கண்டனம் தெரிவித்தது.
இதுகுறித்து சிறப்பு ஆணையாளரும், நீதிபதியுமான ஜெயகிருஷ்ணன் தாக்கல் செய்த அறிக்கையை ஐகோர்ட்டு சுட்டிக்காட்டியது. மேலும் இந்த விவகாரம் தொடர்பாக நாளை (வெள்ளிக்கிழமை) அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தேவசம்போர்டுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
No comments