• Breaking News

    தனிமையில் இனிமை...... கள்ளக்காதலன் மற்றும் மனைவியின் தலையை வெட்டி எடுத்த கணவன்

     


    கள்ளக்குறிச்சி அருகே உள்ள மலைக்கோட்டாலம் கிராமத்தை சேர்ந்தவர் கொளஞ்சி (வயது 60), கூலி தொழிலாளி. இவருக்கு ஏற்கனவே கலியம்மாள் என்பவருடன் திருமணமாகி 5 குழந்தைகள் இருந்தது. இதில் 2 குழந்தைகள் உயிரிழந்த நிலையில் கலியம்மாள், தனது 3 குழந்தைகளுடன் கணவர் கொளஞ்சியை பிரிந்து சென்று விட்டார்.

    இதையடுத்து கொளஞ்சி, நாட்டார்மங்கலத்தை சேர்ந்த லட்சுமி (40) என்பவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இதில் மூத்தமகளுக்கு திருமணம் ஆகி தனது கணவருடன் வசித்து வருகிறார். இரண்டாவது மகள் கல்லூரியில் என்ஜினீயரிங்கும், மூன்றாவது மகள் அரசு பள்ளியில் 11-ம் வகுப்பும் படித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் கொளஞ்சியின் வீட்டு மொட்டை மாடியில் இன்று காலை லட்சுமியும், 55 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரும் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் முண்டமாக கிடந்தனர். இருவரின் தலையையும் காணவில்லை. இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் இதுபற்றி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் கள்ளக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கவேல், இன்ஸ்பெக்டர் ராபின்சன், வரஞ்சரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்து கிடந்தவர்களின் உடல்களை பார்வையிட்டு விசாரணையை தொடங்கினர்.

    அப்போது அவர்களது உடல்களின் அருகில் ஒரு செல்போன் இருந்தது. அந்த செல்போனை வைத்து விசாரணை நடத்தியதில் இறந்து கிடந்த ஆண் அதே பகுதியை சேர்ந்த தங்கராசு (57) என்பது தெரியவந்தது. இதற்கிடையே இதுபற்றி அறிந்த கிராம மக்கள் அங்கு திரண்டு வந்தனர். இதனால் அந்த பகுதியே பரபரப்பாக காட்சி அளித்தது.

    தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் இரட்டைக் கொலைக்கான காரணம் குறித்து திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதில் தங்கராசுவுக்கும், லட்சுமிக்கும் இடையே ஏற்கனவே பழக்கம் இருந்துள்ளது. நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதற்கிடையே அவ்வப்போது கொளஞ்சி வேலை காரணமாக வெளியூர் சென்று விடுவதாக கூறப்படுகிறது.

    இதை வசதியாக பயன்படுத்திக் கொண்ட லட்சுமியும், தங்கராசுவும் தனிமையில் இனிமை கண்டு வந்துள்ளனர். நாளடைவில் இந்த கள்ளக்காதல் விவகாரம் கொளஞ்சிக்கு தெரியவந்தது. இதையடுத்து அவர் லட்சுமியையும், தங்கராசுவையும் தனித்தனியாக கண்டித்துள்ளார். இருப்பினும் காமம் கண்ணை மறைத்ததால், அவர்கள் தங்கள் கள்ளக்காதலை தொடர்ந்து வந்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த கொளஞ்சி  இருவர் மீதும் கொலை வெறியில் இருந்துள்ளார். இருவரையும் கையும், களவுமாக பிடிக்க புதிய யுக்தியை கையாண்டார்.

    நேற்று இரவு கொளஞ்சி வெளியூர் செல்வதாக தனது மனைவியிடம் கூறிவிட்டு அருகில் உள்ள இடத்தில் மறைந்து கொண்டார். தனது கணவர் வெளியூர் சென்றதாக நினைத்த லட்சுமி, உடனே கள்ளக்காதலன் தங்கராசுவை செல்போனில் அழைத்துள்ளார். அதன்படி தங்கராசுவும் இரவில் லட்சுமியின் வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் இருவரும் வீட்டின் மொட்டை மாடிக்கு சென்று உல்லாசமாக இருந்ததாக தெரிகிறது.

    இதற்கிடையே தங்கராசு தனது வீட்டிற்கு செல்வதை அறிந்த கொளஞ்சி பின் தொடர்ந்து சென்றுள்ளார். பின்னர் அவர்கள் மாடிக்கு சென்றதும், வீட்டில் இருந்த கொடுவாளை எடுத்துக்கொண்டு கொளஞ்சியும் மாடிக்கு சென்றுள்ளார். அப்போது லட்சுமியும், தங்கராசுவும் உல்லாசமாக இருந்ததை நேரில் பார்த்து ஆத்திரமடைந்த கொளஞ்சி, கொடுவாளால் தங்கராசுவை வெட்டியுள்ளார். இதைபார்த்து அதிர்ச்சியடைந்த லட்சுமி கொளஞ்சியை தடுக்க முயன்றார். இதனையடுத்து கொளஞ்சி தான் வைத்திருந்த கொடுவாளால் லட்சுமியையும் சரமாரியாக வெட்டினார். இந்த தாக்குதலில் இருவரும் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தனர்.

    இருப்பினும் ஆத்திரம் தீராத கொளஞ்சி, இருவரின் தலைகளையும் கொடுவாளால் அறுத்து துண்டாக்கி எடுத்தார். பின்னர் அந்த இரண்டு தலைகளையும் பாலித்தீன் கவர்களில் சுற்றி கட்டைப்பையில் போட்டுள்ளார். தொடர்ந்து வீட்டில் இருந்த மொபட்டை எடுத்து கொண்டு கொளஞ்சி கள்ளக்குறிச்சி பஸ் நிலையம் வந்துள்ளார். இதையடுத்து தனது மொபட்டை கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் நிறுத்திவிட்டு அங்கிருந்து பஸ் மூலம் வேலூர் மத்திய சிறைச்சாலைக்கு சென்றார்.

    பின்னர் அங்கிருந்த போலீசாரிடம் நடந்த சம்பவத்தை கூறி தான் எடுத்து வந்த 2 தலைகளுடன் சரண் அடைந்தார். இதையடுத்து அங்கிருந்த போலீசார், கொளஞ்சியை பாகாயம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேற்கண்ட தகவல் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

    இதற்கிடையே கொடுவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட லட்சுமி மற்றும் தங்கராசு ஆகியோரின் உடல்களை போலீசார் கைப்பற்றி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக வரஞ்சரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் கொலை செய்யப்பட்ட கொளஞ்சியை கள்ளக்குறிச்சி அழைத்து வரவும் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். கள்ளக்காதல் விவகாரத்தில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவியை கொடுவாளால் வெட்டிக்கொன்று தலை துண்டித்த சம்பவம் கள்ளக்குறிச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    No comments