• Breaking News

    தவறான வழி காட்டிய கூகுள் மேப்..... கொடைக்கானலில் அந்தரத்தில் தொங்கிய லாரி.....

     


    திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே உள்ள சின்னப்பள்ளம் கிராமத்திற்கு கர்நாடக பதிவெண் கொண்ட ஒரு லாரி வந்தது. அந்த லாரியில் நெல்லையைச் சேர்ந்த டிரைவர் பர்னிச்சர் பொருட்களை ஏற்றி கொண்டு, அவற்றை இறக்கி வைப்பதற்காக வந்திருந்தார்.


    சம்பந்தப்பட்ட வீட்டு முகவரியை கூகுள் வரைபடம் உதவியுடன் தேடி லாரி டிரைவர் வந்தார். அப்போது குறுகிய சாலையில் லாரி சென்றது. பாக்கியபுரம் குடியிருப்பு பகுதிக்குள் வாகனம் சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்தது. ஏற்றமான பகுதி என்பதால் லாரி பின்னோக்கி நகரத் தொடங்கியது. இதனால் லாரியை நிறுத்த முயன்ற டிரைவர், அதை கட்டுப்படுத்த முடியாமல் போனார். லாரி பின்னோக்கி சென்று அங்கிருந்த தடுப்பு கம்பியை இடித்து, பள்ளத்தாக்கின் விளிம்பில் தொங்கியது.

    இதைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் விரைந்து சென்று லாரி டிரைவரை மீட்டனர். “இந்த சாலைக்கு செல்ல மெயின் ரோடு இருந்தும், கூகுள் வரைபடம் தவறாக குறுகிய சாலையை காட்டியதே விபத்துக்கு காரணம்,” என லாரி டிரைவர் தெரிவித்தார்.

    கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் பலரும் சமூக வலைதளங்களில் சில இடங்களைப் பார்த்து, கூகுள் வரைபடத்தை மட்டுமே நம்பி வாகனங்களில் வந்து விபத்துக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே கொடைக்கானலில் உள்ள போலீசார் மற்றும் வியாபாரிகளிடம் இருப்பிடத்தை உறுதி செய்து கொண்ட பிறகே செல்ல வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    No comments